புக்கிட் தீமா டர்ஃப் சிட்டியில் 700 வீடுகள் வரை கட்டலாம்: பகுப்பாய்வாளர்கள்

புக்கிட் தீமா டர்ஃப் சிட்டியில் 700 வீடுகள் வரை கட்டலாம்: பகுப்பாய்வாளர்கள்

2 mins read
3540c0ee-b362-4ee8-9a03-d2546bf0beae
ஏறக்குயை ஆறு காற்பந்துத் திடல்களின் அளவுக்குச் சமமான நிலப் பகுதிகளில் 600 முதல் 700 வரையிலான கொண்டோமினிய வீடுகளை அல்லது கிட்டத்தட்ட 500 வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளைக் கட்ட முடியும் - படம்: நகர மறுசீரமைப்பு ஆணையம்

புக்கிட் தீமாவில் ஒரு காலத்தில் குதிரைப் பந்தயங்கள் நிகழ்ந்த திடலை உள்ளடக்கிய டர்ஃப் சிட்டியில் முதன்முறையாக குடியிருப்பு கட்டடங்கள் கட்ட உத்தேசிக்கப்பட்டு உள்ளது.

அந்த உத்தேசத் திட்டத்தின் அடிப்படையில், டனர்ன் ரோட்டில் அமைந்துள்ள இரு நிலப் பகுதிகளில் ஏறத்தாழ 700 வீடுகளைக் கட்டலாம் என்பது சொத்துச் சந்தை பகுப்பாய்வாளர்களின் கருத்து.

சிக்ஸ்த் அவென்யூ எம்ஆர்டி நிலையத்திற்கு அருகில் உள்ள 3.2 ஹெக்டர் நிலத்தை வீடுகளைக் கட்டுவதற்காக நகர மறுசீரமைப்பு ஆணையம் தயார் செய்து வருகிறது.

டர்ஃப் சிட்டியில் மேற்கொள்ளப்படும் முதல் மேம்பாட்டுப் பணி அது.

மத்திய வட்டாரங்களில் இனிவரும் காலங்களில் குடியிருப்புக்கான தேவை உருவாவதை கருத்தில் கொண்டு அதற்கான ஆயத்தப் பணிகள் அங்கு நடைபெறுகின்றன.

டனர்ன் ரோட்டில் தற்போதைய போக்குவரத்து வசதிகளுக்கு மிக அருகில் உள்ள பகுதிகளிலிருந்து அந்த வட்டாரத்தின் எஞ்சிய பகுதிகளில் அத்தகைய தேவை எழக்கூடும்.

வீடமைப்புக்கான மேம்பாடுகளுக்காக நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் பெருந்திட்டத்தில் திருத்தங்கள் பரிசீலிக்கப்படுகின்றன. என்ன மாதிரி திருத்தங்கள் என்ற விவரத்தை ஆணையம் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 18) வெளியிட்டது.

2 ஹெக்டர் பெரிய நிலப்பரப்பில் உருவாகும் வீடமைப்புக் கட்டடங்களின் தரைத்தளம் வர்த்தகங்களுக்கு ஒதுக்கப்படலாம்.

கடைகள், பூங்கா போன்றவற்றுடன் உருவாக்கப்படும் குடியிருப்பு மேம்பாடுகள் தற்போதைய மற்றும் வருங்காலக் குடியிருப்பாளர்களுக்கு புத்தம் புதிய வசதிகள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களை அளிக்கும் என்று ஆணையம் தெரிவித்து உள்ளது.

மேலும், அதிகமான குடியிருப்பாளர்கள் மிக அருகிலேயே போக்குவரத்து வசதிகளைப் பெறும் வகையில் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளதாகவும் அது கூறியது.

ஏறக்குயை ஆறு காற்பந்துத் திடல்களின் அளவுக்குச் சமமான காலி மனைகளில் 600 முதல் 700 வரையிலான கொண்டோமினிய வீடுகளை அல்லது கிட்டத்தட்ட 500 வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளைக் கட்ட முடியும் என சொத்துச் சந்தைப் பகுப்பாய்வாளர்கள் கூறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்