வழக்கறிஞர்கள், சட்ட ஆலோசகர்கள், வழக்கறிஞரின் மேற்பார்வையில் செயல்படும் சட்டப் பயிற்சி பெற்ற அலுவலர்கள் போன்றோர் வாழ்க்கைத் தொழில் மேம்பாடு தொடர்பில் கூடுதல் வழிகாட்டுதலைப் பெறவுள்ளனர்.
இதன் தொடர்பில் அமைக்கப்படும் புதிய திறன் கட்டமைப்பு அதற்கு வகைசெய்யும்.
பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா, ஏப்ரல் 3ஆம் தேதி நடைபெற்ற ஆசிய-பசிபிக் சட்ட மாநாட்டில் சட்டச் சேவைகளுக்கான புதிய திறன் கட்டமைப்பு குறித்து அறிவித்தார்.
தற்போதைய சிக்கலான வர்த்தக, சட்டச் சூழலில், சட்ட ஆலோசகர்களின் உத்திபூர்வப் பங்களிப்பை அரசாங்கம் அங்கீகரிப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
வழக்கறிஞராகப் பணியாற்றாமல் நிறுவனங்களில் சட்ட ஆலோசனை வழங்குவோர் சிக்கலான சட்டச் சூழலை வழிநடத்துவதிலும் வர்த்தக மீள்திறனை வடிவமைப்பதிலும் முன்னணியில் இருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.
“உங்களின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கும் தலைமைத்துவத்துக்கும் ஆதரவு வழங்கக் கடப்பாடு கொண்டுள்ளோம். சட்ட ஆலோசகர்களின் செழிப்புக்கு மட்டமல்லாமல் அவர்கள் தலைமைத்துவத்தை ஏற்பதற்கும் ஏற்ற சூழலலைப் பங்காளித்துவ அமைப்புகளுடன் இணைந்து உருவாக்குவோம்,” என்றார் அமைச்சர் இந்திராணி.
இரண்டு நாள் நடைபெறும் ஆசிய-பசிபிக் சட்ட மாநாட்டில் கலந்துகொள்ளும் இந்த வட்டாரத்தைச் சேர்ந்த சட்டத்துறை வல்லுநர்கள் அத்துறையின் அண்மைய போக்குகள், மேம்பாடுகள் ஆகியவை குறித்துக் கலந்துரையாடுவர்.
லிட்டில் இந்தியா வட்டாரத்திலுள்ள ஒன் ஃபேரர் ஹோட்டலில் நடைபெறும் அந்த மாநாட்டிற்கு சிங்கப்பூர் நிறுவனச் சட்ட ஆலோசகர் சங்கம் (SCCA) ஏற்பாடு செய்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அந்நிறுவனம் சிங்கப்பூர் சட்டக் கழகத்துடன் இணைந்து சட்டத் துறையினருக்கான புதிய திறன் கட்டமைப்பை உருவாக்கியுள்ளது.
சட்டத் துறையினரின் திறன் மேம்பாடு, தொழில்முறை வளர்ச்சி, வாழ்க்கைத்தொழில் மேம்பாடு ஆகியவற்றுக்குப் புதிய கட்டமைப்பு ஆதரவு வழங்கும் என்று சிங்கப்பூர் சட்டக்கழகம் கூறியது.
சங்கமும் கழகமும் இதன் தொடர்பிலான பயிற்சித் திட்டத்தை வடிவமைத்து வருவதாகக் கூறப்பட்டது. அடுத்த ஆண்டு (2026) அது அறிமுகம் காணவிருக்கிறது.
மாநாட்டில் பேசிய அமைச்சர் இந்திராணி, சிங்கப்பூர் நிறுவனச் சட்ட ஆலோசகர் சங்கத்தின் செயல்திறனில் அரசாங்கம் முதலீடு செய்திருப்பதாகவும் சிங்கப்பூர் சட்ட ஆலோசகர் சமூகத்தின் வளர்ச்சிக்கு அது தலைமையேற்று வழிநடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
நிகழ்ச்சியில், இந்தோனீசியா, தாய்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளின் சட்ட ஆலோசகர் சங்கங்களுடன் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வுக் குறிப்புகள் கையெழுத்தாயின.