தெம்பனிஸ் குழுத்தொகுதி மசெக வேட்பாளர்கள் அறிமுகம்

2 mins read
ac36cdb6-57f4-4a8a-b431-6643347bca7a
தெம்பனிஸ் குழுத்தொகுதியில் மசெக சார்பில் போட்டியிடவுள்ள (இடமிருந்து) மனிதவள மூத்த துணையமைச்சர் டாக்‌டர் கோ போ கூன், புதுமுகம் டாக்‌டர் சார்லின் சென், சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி, புதுமுகம் டேவிட் நியோ, போக்குவரத்து அமைச்சுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் பே யாம் கெங். - படம்: சாவ்பாவ்
multi-img1 of 2

மக்கள் செயல் கட்சி தெம்பனிஸ் குழுத்தொகுதியில் போட்டியிடும் தனது வேட்பாளர் அணியை புதன்கிழமை (ஏப்ரல் 16) அறிவித்துள்ளது.

சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி தலைமையில் தெம்பனிஸ் குழுத்தொகுதியில் ஐவர் அணி களமிறக்கப்படுகிறது.

அணியில் இணைந்துள்ள இரண்டு புதுமுகங்களான சிங்கப்பூர் ராணுவத்தின் முன்னாள் தலைவர் டேவிட் நியோ, 47, நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் சந்தைப்படுத்துதல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் சார்லின் சென், 43, ஆகியோர் அறிமுகப்படுத்தப்பட்டனர்.

நீடித்த நிலைத்தன்மை, சுற்றுச்சூழல், போக்குவரத்து அமைச்சுகளுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் பே யாம் கெங், மனிதவள மூத்த துணையமைச்சர் டாக்‌டர் கோ போ கூன் ஆகியோரும் அங்குக் களமிறக்கப்படுகின்றனர்.

முன்னாள் தெம்பனிஸ் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான டெஸ்மண்ட் சூ, புதிய தனித்தொகுதியான தெம்பனிஸ் சங்காட்டில் போட்டியிடவுள்ளார்.

முன்னாள் தெம்பனிஸ் ஈஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர் செங் லி ஹுய், நாடாளுமன்ற நாயகர் டான் சுவான் ஜின்னுடன் முறையற்ற உறவிலிருந்த காரணத்தால் பதவி விலகினார்.

மே 3ஆம் தேதி நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலில் தெம்பனிஸ் குழுத்தொகுதியில் பன்முனைப் போட்டி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதுகுறித்த கேள்விக்கு, முன்கூட்டியே எதையும் கணிக்க விரும்பவில்லை என்றும், வேட்புமனுத் தாக்கல் நாள்வரை காத்திருக்க வேண்டும் என்றும் அமைச்சர் மசகோஸ் தெரிவித்தார்.

மேலும், குடியிருப்பாளர்களின் தேவைகள் மீது கவனம் செலுத்தி, அவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே தங்கள் அணியின் முக்கிய முன்னுரிமையாகும் என்று அவர் கூறினார்.

“யார் வேண்டுமானாலும் ஒரு நகரத்தை உருவாக்க முடியும். ஆனால், தெம்பனிஸ் ஒரு முன்மாதிரி நகரம். அக்கறையுள்ள சமூகத்தால் மட்டுமே அதைக் கட்டமைக்க முடியும்,” என்று அமைச்சர் கூறினார்.

ஒருவருக்கொருவர் அக்கறை காட்டி, அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை அமைக்கும்போது ​​யாரும் பின்தங்கியிருக்க மாட்டார்கள் என்றார் அவர்.

குடியிருப்பாளர்களுக்கான வசதிகளை மேம்படுத்தும் முயற்சியில் நீடித்த நிலைத்தன்மையுடைய தீர்வுகளைத் தங்கள் அணியினர் தொடர்ந்து பயன்படுத்துவார்கள் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

சமூகப் பாதுகாப்பு, தொழில்நுட்பம் உள்ளிட்ட பொதுச் சேவைத் துறைகளில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் பணியாற்றியுள்ள டேவிட், ராணுவத் தலைமைப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்ட முதல் மின்னல்படை அதிகாரி ஆவார். ஐந்து வயதில் தாயை இழந்ததாகக் கூறிய டேவிட், தமது மாமாவும் அத்தையும்தான் தன்னை வளர்த்ததாகச் சொன்னார்.

“வாழ்க்கையின் தொடக்கம் சிறப்பாக இல்லையென்றாலும் எனது வாழ்வில் எந்தக் குறையும் இருந்ததுபோல் உணரவில்லை,” என்றார் அவர்.

மக்களுடன் நல்ல உறவை உருவாக்கி, அவர்களை முதன்மைப்படுத்தும் சமூகத்தை உருவாக்குவதே தனது நோக்கம் என்றார் அவர்.

மற்றொரு புதுமுகமான டாக்டர் சென், கடந்த ஆண்டு ஜூனில் தெம்பனிஸ் ஈஸ்ட் வட்டாரத்தில் அறிமுகமாகி, இரண்டாம் அடித்தள ஆலோசகராகப் பணியாற்றிவருகிறார்.

இரு குழந்தைகளுக்குத் தாயான அவர், இளையர்களிடையே மன உறுதியையும் நல்வாழ்வையும் ஊக்குவிக்க விரும்புவதாகத் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்