போலி நிறுவனங்கள் மூலம் தரைவீடுகளை வாடகைக்கு எடுத்த அமெரிக்கர் குறித்து விசாரணை

போலி நிறுவனங்கள் மூலம் தரைவீடுகளை வாடகைக்கு எடுத்த அமெரிக்கர் குறித்து விசாரணை

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

04 Nov 2026 - 8:15 pm

2 mins read

சிங்கப்பூரில் குடும்பத்துடன் வசிக்கப் போலி நிறுவனங்களைப் பயன்படுத்தி மூன்று தரைவீடுகளை வாடகைக்கு எடுத்த நபர் குறித்துக் காவல்துறை விசாரித்து வருகிறது.

அத்தகவலைச் சட்ட, போக்குவரத்து மூத்த துணையமைச்சர் முரளி பிள்ளை நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (நவம்பர் 4) தெரிவித்தார்.

மோசடிக் குற்றத்திற்குப் பத்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம் அல்லது பிரம்படி அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

வாடகை செலுத்தாமல் வீட்டைவிட்டு வெளியேற மறுக்கும் வாடகைதாரர்களிடமிருந்து உரிமையாளர்களைப் பாதுகாப்பது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் லூயி சுவா, யிப் ஹான் வெங் ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்குத் திரு முரளி பதிலளித்தபோது இவ்வாறு தெரிவித்தார்.

அமெரிக்கரான ஆண்டனி தாமஸ் பிரைஸ், நோரந்த் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் இயக்குநரும் பங்குதாரருமாவார். 

அவர் அந்நிறுவனத்தையும் அதன் துணை நிறுவனமான பன்டலுக்சையும் (Bundleluxe) பயன்படுத்தி, 2019ஆம் ஆண்டுக்கும் 2026ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் பல்வேறு வீட்டு உரிமையாளர்களுடன் தனித்தனி ஒப்பந்தங்களில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.

குடியேறிய சிறிது காலத்திலேயே அவர் வாடகை கொடுப்பதை நிறுத்திவிட்டுச் சட்டப் பிரச்சினைகளை உருவாக்கினார்.

2026ஆம் ஆண்டு மே மாதம், கெம்பாங்கானில் முதிய தம்பதியருக்குச் சொந்தமான வீட்டிற்குப் பாதி முன்பணத்தையும் ஒரு மாத வாடகையையும் மட்டுமே அவர் கொடுத்தார்.

வீட்டை மீட்பதைத் தடுக்க அவர் தொடர்ந்த மனுவை மாவட்ட நீதிபதி சியா கொக் கூன் தள்ளுபடி செய்தார். அது நீதிமன்ற நடைமுறையைத் தவறாகப் பயன்படுத்தும் செயல் என்று நீதிபதி கண்டித்தார்.

வாடகை தராவிட்டால் வீட்டை உடனடியாக மீட்பது இயல்பான நடைமுறையாக இருக்க முடியாது எனத் திரு முரளி கூறினார்.

சில வாடகைதாரர்கள் உண்மையான சிரமங்களை எதிர்கொள்ளலாம் அல்லது நல்லெண்ண அடிப்படையில் வழக்காடலாம் என்பதைக் குறிப்பிட்ட அவர், குடியிருப்புகளை வாடகைக்கு எடுக்கும்போது தனிநபர் உத்தரவாதத்தைக் கட்டாயமாக்க முடியாது என்றார்.

அது முறையான நிறுவனங்களைப் பாதிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

எனினும், நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடும்முன் உரிமையாளர்கள் விரும்பினால் தனிநபர் உத்தரவாதத்தைக் கோர ஏற்கனவே சட்டத்தில் வழியுண்டு என அவர் விளக்கினார்.

குறிப்புச் சொற்கள்