பாதுகாப்பற்ற முறையில் மோட்டார்சைக்கிள்களை ஓட்டியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் போக்குவரத்துக் காவல்துறை அதிகாரிகள் மூவரிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
சமூக ஊடகப் பக்கத்தில் (செப்டம்பர் 11) பதிவேற்றப்பட்ட காணொளியில், இரண்டு போக்குவரத்துக் காவல்துறை அதிகாரிகள் மற்றொரு வாகனத்துக்கு முன்னால் திடீரெனப் பாதையை மாற்றிக் கடப்பது தெரிந்தது.
அதன் பிறகு, மூன்றாவது போக்குவரத்துக் காவல்துறை அதிகாரி இடப்புறத்திலிருந்து வந்து அந்த வாகனத்தை முந்திச் சென்று பாதையைக் குறுக்கிட்டதால், ஓட்டுநர் உடனடியாக வாகனத்தை நிறுத்த வேண்டியதாயிற்று. இந்தச் சம்பவம் அந்த வாகனத்தில் இருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
செப்டம்பர் 4ஆம் தேதி அதிகாலை 3 மணி அளவில் உபி அவென்யூ 3ல் அமைந்துள்ள போக்குவரத்துக் காவல்துறை தலைமையகத்திற்குள் அதிகாரிகள் திரும்பியபோது இச்சம்பவம் நிகழ்ந்தது.
இந்தச் சம்பவம் குறித்துத் தனக்குத் தெரியும் என்றும் அவர்களின் நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள்மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்தது.
சாலைப் பாதுகாப்பைக் காவல்துறை மிகவும் கடுமையாகக் கருதுவதாகவும், அதிகாரிகள் அனைவரும் போக்குவரத்து விதிகளை முறையாகப் பின்பற்றி கவனத்துடன் வாகனங்களை ஓட்ட வேண்டும் என்றும் காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

