திலி: 2012ஆம் ஆண்டில் தாம் முதன்முதலில் திமோர் லெஸ்டேவில் தரையிறங்கியபோது, அங்குள்ள விமான ஓடுபாதையில் கோழிகளும் மாடுகளும் நடமாடிக் கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாகச் சிங்கப்பூரர் ஜூலியன் சியாங் தெரிவித்தார்.
ஆனால், அதன் பிறகு அந்நாட்டின் தலைநகரான திலியைச் சுற்றிப் பார்த்த சில நாள்களிலேயே, அங்கு வர்த்தகம் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதை அவர் உணர்ந்தார்.
பத்தாண்டுகளுக்குமேல் கடந்துவிட்ட நிலையில், சியாங் இயக்குநராகப் பணியாற்றும் எண்ணெய், எரிவாயு நிறுவனம் தற்போது அந்நாட்டின் பல்வேறு மேம்பாட்டுப் பணித்திட்டங்களுக்கு டீசல், பெட்ரோலியம் ஆகியவற்றை விநியோகம் செய்து வருகிறது.
சிங்கப்பூரில் தொடங்கப்பட்டு, வட்டாரத்தின் பிற நாடுகளிலும் கால்பதித்துள்ள குளோபல் குழும நிறுவனம், தற்போது திமோர் லெஸ்டேவில் ஒன்பது எரிபொருள் நிலையங்களைச் சொந்தமாகக் கொண்டுள்ளது.
இது குறித்து ஜூலை 2ஆம் தேதி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு அளித்த நேர்காணலில், “திமோர் லெஸ்டேவை நீங்கள் உற்று நோக்கினால், அந்நாட்டில் முதலீடு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் ஏராளமாக இருப்பதை அறிந்துகொள்வீர்கள். குறிப்பாகக் கட்டுமானம், வேளாண்மை, சுற்றுலா ஆகிய துறைகளில் அந்நாட்டுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது,” என்று சியாங் கூறினார்.
திமோர் லெஸ்டேவில் வசித்துவரும் சிங்கப்பூரர்களில் ஒருவரான 57 வயது சியாங், ஜூலை 2ஆம் தேதி, திலி நகரில் உள்ள பாம் ஸ்பிரிங்ஸ் ஹோட்டலில் நடைபெற்ற வெளிநாடுவாழ் சிங்கப்பூரர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் லாரன்ஸ் வோங்கைச் சந்தித்துப் பேசினார்.
இரண்டு நாள் அதிகாரபூர்வப் பயணமாகப் பிரதமர் வோங் திமோர் லெஸ்டே சென்றுள்ளார்.

