சிங்கப்பூர் முதலீட்டாளர்களின் கவனம், ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலம் பக்கம் திரும்பியிருக்கிறது.
அங்கு குடியிருப்பு, தொழில் வளாக மேம்பாட்டுப் பகுதிகளைக் கைப்பற்றுவதில் அவர்கள் முனைப்புக் காட்டி வருகின்றனர்.
ஆசிய பசிபிக் வட்டாரத்துக்கான கோல்லையர்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் கோவிந்தா சிங், “முக்கிய சொத்து சந்தையைப் பொறுத்தவரை ஜோகூர் இன்னும் ஆரம்ப நிலையில்தான் உள்ளது. அதன் மக்கள் தொகை பெருகும்போதும், தொழில் வளர்ச்சியடையும்போதும் அது வளர வேண்டிய பாதை இன்னும் நிறைய உள்ளது,” என்றார்.
“அங்கு ஏகப்பட்ட நிலம் இருக்கிறது. ஆனால் இன்னமும் முதலீடு செய்வதற்கான தரமான நிலப் பகுதிகள் இல்லை. ஆனால் காலம் மாறும்,” என்றார் அவர்.
மே பேங்கும் ரெடாஸ் எனும் சிங்கப்பூர் சொத்து மேம்பாட்டாளர் சங்கமும் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் முதலீட்டாளர்களிடமும் மேம்பாட்டாளர்களிடமும் அவர் பேசினார்.
“உயர்நிலை குடியிருப்பு சந்தைகளில் தற்போது பெரிய அளவில் விநியோகம் தேக்கமடைந்துள்ளது. ஜோகூரில் இரண்டாவது வீடுகளை வாங்குபவர்களுக்கான சந்தையில் நிறைய சொத்துகள் வாடகைக்கு விடப்படுகின்றன, ஆனாலும் மக்களிடமிருந்து அவற்றுக்கான தேவை ஏற்படவில்லை. ஜோகூரில் அதிகமான மக்கள் வசிக்கவும் வேலை செய்யவும் விரும்பினால் குடியிருப்புகளை கட்டுப்படியாகக்கூடிய விலையில் வைத்திருக்க வேண்டும்,” என்று திரு சிங் கூறினார்.
சிங்கப்பூரில் உள்ள மலேசிய முதலீட்டு மேம்பாட்டு ஆணையத்தின் வினோதன் துல்சிநாதன், மேபேங்கின் வர்த்தக வங்கிப் பிரிவின் சொத்துச் சந்தை இயக்குநர் சோங் பால் வீ ஆகியோருடனான கலந்துரையாடலின் ஒரு பகுதியாக அவர் பேசினார்.
மேபேங்க் டவரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை யுஒஎல் குழுமத்தின் வர்த்தக, மேம்பாட்டு அதிகாரி யுவோன் டான் வழிநடத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
ஜோகூர்-சிங்கப்பூர் பொருளியல் மண்டலத்தில் உள்ள இஸ்கந்தர் புத்திரியில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலப் பகுதிகளை மேம்படுத்த மலேசியாவின் யுஇஎம் சன்ரைசுடன் கூட்டு சேர்ந்துள்ளதாக குவோகோலேண்ட் கடந்த பிப்ரவரியில் அறிவித்தது. ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டல வெற்றிக்கான சாத்தியக்கூறு குறித்த கேள்விக்குப் பதிலளித்த திரு சோங், “இரு அரசாங்கங்களும் சேர்ந்து செயல்படுத்தும் வலுவான முயற்சி அது,” என்று குறிப்பிட்டார்.
துல்சிநாத்சன், ஜோகூர்-சிங்கப்பூர் பொருளியல் மண்டலம் தவிர்க்க முடியாத திட்டமாகும் என்று வருணித்தார்.
மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் மகத்தான பொருளியல் நன்மைகளை அது கொண்டு வரும் என்றும் அவர் சொன்னார்.

