புவிசார் அரசியல் பதற்றங்கள், உயர்ந்த வட்டி விகிதங்கள், சந்தையிலிருந்து வெளியேறுவது போன்றவற்றால் முதலீட்டாளர்களுக்கு பணத்தை மீட்டெடுப்பது கடினமாகியுள்ளது. இருந்தாலும் பெரிய முதலீட்டாளர்கள் சிங்கப்பூர் உட்பட தனியார் சந்தைகளை விரும்புகின்றனர்.
செயற்கை நுண்ணறிவுக்கான (ஏஐ) உள்கட்டமைப்பை உருவாக்குவதில் போட்டி அதிகரித்து வருவதால் புதிய முதலீட்டு வாய்ப்புகள் உருவாகி இத்துறைக்கு சாத்தியமான புதிய உத்வேகத்தை அளித்து வருகிறது.
கோல்ட்மேன் சேக்ஸ் ஆல்டர்நேட்டிவ்சின் இணைத் தலைவரான ஜெஃப் ஃபைன், “புவிசார் அரசியல் பதற்றங்களாலும் உயர்ந்த வட்டி விகிதங்களாலும் வழக்கமான முதலீட்டு வெளியேற்றங்களை மெதுவாக்கியுள்ளது என்றார்.
ஆனால் ஏஐ உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான போட்டி, இந்தப் பத்து ஆண்டுகளில் மிக முக்கியமான முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்குகிறது என்று அவர் கூறினார்.
தற்போதைய முதலீடுகளிலிருந்து மூலதனத்தை மீட்டெடுப்பதில் சவால்கள் இருந்தபோதிலும் 84 விழுக்காட்டு நிறுவன முதலீட்டாளர்கள் தனியார் சந்தைகளில் தங்கள் முதலீடுகளைத் தக்கவைக்கவோ அல்லது அதிகரிக்கவோ திட்டமிட்டுள்ளனர் என்று கோல்ட்மேன் சேக்சின் 2026 உலகளாவிய மாற்றுகளுக்கான ஆய்வு தெரிவிக்கிறது. இது 2025ஆம் ஆண்டின் 83 விழுக்காட்டுடன் ஒத்துப்போகிறது.
டிபிஎஸ், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அல்லது சிங்டெல் போன்ற நிறுவனங்களின் பங்குகளைப் போலல்லாமல் பங்குச் சந்தைகளில் வெளிப்படையாக வர்த்தகம் செய்யப்படாத முதலீடுகளையே தனியார் சந்தைகள் குறிக்கின்றன.
இவற்றில் தனியார் பங்கு மூலதனம், தனியார் கடன், உள்கட்டமைப்பு, சில குறிப்பிட்ட வகை சொத்து முதலீடுகள் ஆகியவை அடங்கும்.
இந்த முதலீடுகள் கவனத்தை ஈர்த்துள்ளன. ஏனெனில் இவை பட்டியலிடப்பட்ட பங்குகள், கடன் பத்திரங்களுக்கு அப்பாற்பட்ட வாய்ப்புகளை அணுகும் வசதியை வழங்குகின்றன.
இருப்பினும், இவற்றின் மதிப்பைக் கணிப்பதும் விற்பதும் சிரமமாக இருக்கலாம். மேலும் முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தைத் திரும்பப் பெற நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருக்கலாம்.
2026 ஜூனுக்கும் ஆகஸ்ட்டுக்கும் இடையே நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 255 வரையறுக்கப்பட்ட பங்காளிகள், பிற நிறுவன முதலீட்டாளர்களிடமிருந்து கருத்துகள் திரட்டப்பட்டன.
வரையறுக்கப்பட்ட பங்காளிகள் என்பவர்கள் மூலதனத்தை வழங்கும் செயலற்ற முதலீட்டாளர்கள் ஆவர். இவர்களுக்கு அன்றாட நிர்வாகக் கட்டுப்பாடு எதுவும் இருக்காது. மேலும் இவர்களது சட்டபூர்வ பொறுப்பும் குறிப்பிட்ட எல்லைக்குட்பட்டதாகவே இருக்கும்.
