அமெரிக்க சந்திப்புக்குமுன் சீன வெளியுறவு அமைச்சரைச் சந்தித்த ஈரான் அமைச்சர்

அமெரிக்க சந்திப்புக்குமுன் சீன வெளியுறவு அமைச்சரைச் சந்தித்த ஈரான் அமைச்சர்

2 mins read
27168e6c-e1e9-4f84-9a80-62dc94b3b536
(இடம்) ஈரானிய வெளியுறவு அமைச்சர் அபாஸ் அராக்சி, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயைப் பெய்ஜிங்கில் சந்தித்துப் பேசினார். - படம்: ராய்ட்டர்ஸ்

பெய்ஜிங்: ஈரானிய வெளியுறவு அமைச்சர் அபாஸ் அராக்சி, சீனாவின் உயர்மட்டத் தூதரை புதன்கிழமை (மே 6) பெய்ஜிங்கில் சந்தித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், சீன அதிபர் ஸி ஜின்பிங்கைச் சந்திக்கவிருக்கும் வேளையில் ஈரானும் சீனாவும் அவற்றின் உறவை வலுப்படுத்திக்கொண்டன.

ஈரான்மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தியதை அடுத்து திரு அராக்சி சீனாவுக்கு முதன்முறையாக அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

சீனாவின் உயர்மட்டத் தூதருடன் இடம்பெற்ற சந்திப்பிற்குப் பிறகு சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயைத் திரு அராக்சி சந்தித்துப் பேசியதாக ஈரானிய வெளியுறவு அமைச்சு சொன்னது.

“ஈரான் தன்னைத் தற்காத்துக்கொள்ளவும் எதிர்ப்புகளைச் சமாளிக்கவும் உறுதியாக இருக்கிறது. அதேவேளை, இருதரப்புப் பேச்சுவார்த்தைக்கும் அது தயாராக இருக்கிறது,” என்றார் திரு அராக்சி.

பேச்சுவார்த்தையின்போது ஈரானின் உரிமைகள் காக்கப்படுவது உறுதிசெய்யப்படும் என்றும் திரு அராக்சி சொன்னதாக ஈரானிய மாணவர் செய்தி அமைப்பு கூறியது.

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையைப் பொறுத்தவரை நியாயமான விரிவான உடன்பாட்டை மட்டுமே ஈரான் ஏற்கும் என்றார் திரு அராக்சி.

மத்திய கிழக்குப் போரில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்புகளும் ஹோர்முஸ் நீரிணையின் வழக்கமான, பாதுகாப்பான செயல்பாட்டை மீண்டும் உறுதிசெய்யும்படி சீன வெளியுறவு அமைச்சு அறிவுறுத்தியது.

அணுவாயுதங்கள் உருவாக்குவதைக் கைவிட ஈரான் கொண்டுள்ள உறுதியை வரவேற்பதாகச் சொன்ன சீனா, அணுசக்தியை அமைதியான முறையில் பயன்படுத்துவதற்கு ஈரான் கொண்டுள்ள நியாயமான உரிமையையும் மதிப்பதாகக் குறிப்பிட்டது.

அனைத்துலகக் கப்பல் போக்குவரத்துக்கு ஹோர்முஸ் நீரிணையைத் திறந்துவிட ஈரானிடம் பேசும்படி சீனாவிடம் அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெச்சண்ட் இவ்வாரத் தொடக்கத்தில் தெரிவித்தார்.

மே 14, 15 ஆகிய தேதிகளில் திரு டிரம்ப், திரு ஸியைப் பெய்ஜிங்கில் சந்திக்கவிருக்கிறார். அப்போது ஈரான் குறித்த கருத்துகளைத் திரு டிரம்ப் நேரில் முன்வைப்பார் என்று திரு பெச்சண்ட் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்