சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் (ஐராஸ்), “99-1” என்ற முறை அல்லது கூடுதல் வாடிக்கையாளர் முத்திரை வரியைத் தவிர்ப்பதற்கான அதுபோன்ற ஏற்பாடுகளைப் பயன்படுத்தி தனியார் வீடுகள் வாங்கப்பட்ட 166 சம்பவங்களைக் கண்டுபிடித்துள்ளது.
ஆணையம், கூடுதல் முத்திரை வரியிலும் கூடுதல் கட்டணங்களிலும் ஏறக்குறைய $60 மில்லியன் மீட்டுக்கொள்ளவிருக்கிறது.
இவ்வாண்டு ஏப்ரல் மாத நிலவரப்படி, 187 “99-1” சம்பவங்களின் மறுஆய்வை ஆணையம் நிறைவுசெய்துள்ளது. அவற்றில் 166இல் வரி தவிர்க்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதாக, துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் தமது எழுத்துப்பூர்வ நாடாளுமன்ற பதிலில் தெரிவித்தார்.
செங்காங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹெ டிங் ருக்கு அளித்த பதிலில், “99-1” என்ற முறை, சொத்து வாங்குபவர்கள் பயன்படுத்தும் ஒரு வரி தவிர்ப்பு ஏற்பாடு,” என்றார் திரு வோங். வாங்கிய குடியிருப்புச் சொத்துக்குச் செலுத்தப்படவேண்டிய கூடுதல் முத்திரை வரியைக் குறைப்பதற்காக அவர்கள் அவ்வாறு செய்வதாகத் திரு வோங் கூறினார்.
வரி தவிர்க்கப்பட்ட 166 சம்பவங்களில், சொத்து முகவர்களின் உத்தேச ஈடுபாடு இருப்பதைக் காட்டும் ஆதாரங்களைக் கொண்ட ஏறக்குறைய 10 சம்பவங்களை தற்போது சொத்து முகவை மன்றம் மறுஆய்வு செய்துவருவதாக அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, “99-1” என்ற முறை அல்லது கூடுதல் வாடிக்கையாளர் முத்திரை வரியைத் தவிர்ப்பதற்கான அதுபோன்ற ஏற்பாடுகளைப் பயன்படுத்தி தனியார் வீடுகள் வாங்குவோருக்கு எதிராகத் தகவல் தெரிவிப்போருக்கு ஆணையம் $100,000 வெகுமதி அளிக்கும் என்று கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.

