இஸ்லாமிய சொத்துகள் சந்தை விலைக்கே வாடகைக்கு விடப்படுகின்றன: முயீஸ்

இஸ்லாமிய சொத்துகள் சந்தை விலைக்கே வாடகைக்கு விடப்படுகின்றன: முயீஸ்

2 mins read
1f9912b9-dc37-4c40-9f1e-6ff44fd48de9
கடந்த 2025ஆம் ஆண்டில் கம்போங் கிளாம் கடைத்தொகுதியில் பொருள்கள் வாங்க வந்த பொதுமக்கள். - படம்: ராய்ட்டர்ஸ்

இஸ்லாமிய சமய மன்றத்தின்கீழ் (முயீஸ்) இயங்கும் வஃக்ப் வாரியம் அது நிர்வகிக்கும் சொத்துகளைப் பொது வாடகைக்கு விடும்போது சந்தை நிலவரத்தைக் கருத்தில் கொண்டே செயல்படுகிறது. சிங்கப்பூரில் உள்ள பழைமையான பாரம்பரிய வட்டாரமான கம்போங் கிளாமில் வாடகை பிரச்சினையால் சில மரபுடைமை வர்த்தகங்கள் வெளியேறியதைப் பற்றி சிஎன்ஏ ஊடகம் கடந்த மாதம் செய்தி வெளியிட்டது. அதற்கு பதில் தரும் விதமாக முயீஸ் இதனை தெரிவித்துள்ளது.

வஃக்ப் சொத்துகள் இஸ்லாமிய சமயத்துக்கும் தர்ம சேவைகளுக்கும் நன்கொடையாளர்களால் வழங்கப்பட்டவை. அவற்றை பள்ளிவாசல்களுக்கும் மதரசாக்களுக்கும் உதவி நாடும் சந்ததியினருக்கும் தொண்டு அமைப்புகளுக்கும் முயீஸ் பகிர்ந்து வழங்குகிறது.

முயீஸ் வழங்கிய விவரங்களின்படி, கம்போங் கிளாமில் 26 கடை வீடுகள் வஃக்ப் நிர்வாகத்தின்கீழ் செயல்படுவதாகத் தெரிவித்தது.

முயீஸ் அமைப்பின்கீழ் வாரீஸ் இன்வெஸ்ட்மண்ட் எனும் முதலீடு சார்ந்த துணை நிறுவனம் அதன் சொத்துகளை நிர்வகித்துவருகிறது. அதன் அறங்காவலர்கள் பதவியேற்பதற்கு முன்பாக மன்றத்தால் முறையாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

இஸ்லாமிய நிர்வாகச் சட்டத்தின்படி (AMLA) அவர்கள் கடமையாற்ற வேண்டும். தணிக்கை செய்யப்பட்ட வஃக்ப் நிதி அறிக்கைகளைச் சமர்ப்பிக்கவேண்டும். வஃக்ப் சொத்துகளின் நிர்வாகத்துக்கும் அவை குறிப்பிடப்பட்ட இலக்குகளை அடைவதற்கும் அவர்கள் தொடர்ந்து நிதி ஆதரவை உறுதிசெய்ய வேண்டும்.

அதனைச் சீராக வழிநடத்துவதற்கு சந்தை நிலவரங்களைக் கண்காணித்து அறங்காவலர்கள் செயல்படவேண்டியுள்ளது என்று முயீஸ் விளக்கம் அளித்தது.

கம்போங் கிளாம் வட்டாரத்தில் வாடகை கடந்த இரண்டு ஆண்டுகளில் 2 விழுக்காடு உயர்ந்துள்ளது. இது மத்திய பகுதியில் நிலவும் வாடகை ஏற்றத்தை ஒட்டியே உள்ளது என்று நகர மறுசீரமைப்பு ஆணையம் (யுஆர்ஏ) குறிப்பிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்