தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தீவு முழுவதும் போதைப்பொருள் முறியடிப்பு நடவடிக்கை: 77 பேர் கைது

2 mins read
11cd185e-f262-43b8-81a6-c42e45562784
செப்டம்பர் 21-26 தேதி வரை நடந்த முறியடிப்பு நடவடிக்கைகளில் பலர் கைதாயினர், பல போதைப்பொருள்கள் பறிமுதுல் செய்யப்பட்டன. - படங்கள்: மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு

மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு சிங்கப்பூர் முழுவதும் நடத்திய போதைப்பொருள் முறியடிப்பு நடவடிக்கைகளில் 77 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செப்டம்பர் மாதம் 21லிருந்து 26ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் தீவு முழுவதும் முறியடிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்நடவடிக்கைகளில் 351 கிராம் ஹெராயின், 99 கிராம் ஐஸ், 69 கிராம் கஞ்சா, 10 கிராம் கெட்டமின், எட்டோமிடேட் கலந்ததாக நம்பப்படும் மின்சிகரெட் ‘போட்கள்’ உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு திங்கட்கிழமை (செப்டம்பர் 29) செய்தி அறிக்கையில் தெரிவித்தது. மேலும், 4,228.70 வெள்ளி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அது குறிப்பிட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்களின் மதிப்பு 74,000 வெள்ளிக்கும் அதிகமாகும். பறிமுதலான ஹெராயின், ஐஸ், கஞ்சா ஆகியவை ஒரு வாரத்துக்கு 235 போதைப் புழக்கத்துக்கு அடிமையானவர்கள் பயன்படுத்தப் போதுமானவை என்று மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்தது. அல்ஜுனிட், பூன் கெங், சிலிகி உள்ளிட்ட வட்டாரங்களில் முறியடிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

கைது செய்யப்பட்ட 77 பேரில் ஒருவர் 46 வயது சிங்கப்பூர் பெண். உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் உள்ள சாம்பியன்ஸ் வே பகுதியில் இருக்கும் வீடு ஒன்றில் அந்த மாது பிடிபட்டார்.

அங்கு 143 கிராம் ஹெராயின், 18 கிராம் ஐஸ், 65 கிராம் கஞ்சா, 10 கிராம் கெட்டமின் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

மற்றொரு சந்தேக நபரான 60 வயது சிங்கப்பூர் ஆடவர் இம்மாதம் 21ஆம் தேதி நியூ பிரிட்ஜ் ரோட்டுக்கு அருகில் உள்ள வீடு ஒன்றில் கைது செய்யப்பட்டார். அவ்வீட்டில் 106 கிராம் ஹெராயினையும் 26 கிராம் ஐசையும் அதிகாரிகள் கண்டெடுத்தனர்.

15 கிராமுக்கும் அதிகமான கலப்படமில்லாத ஹெராயினைக் கடத்திய குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்டுவது உறுதி.

இம்மாதம் 25ஆம் தேதியன்று போதைப்பொருள் கடத்தலுக்காக இரு சிங்கப்பூர் ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர். அப்போது மின்சிகரெட் தொடர்பான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. எட்டோமிடேட் கலந்ததாக நம்பப்படும் 524 மின்சிகரெட் ‘போட்கள்’ பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்