காஸாவுக்குள் மனிதநேயப் பொருள்களை அனுமதிக்காமல் தடுப்பதன் மூலம் இஸ்ரேல் அனைத்துலகச் சட்டத்தை மீறி இருக்கக்கூடும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.
பிரெஞ்சு அதிபர் இமேனுவல் மெக்ரோனுடன் செய்தியாளர் கூட்டத்தில் மே 30ஆம் தேதி பேசிய பிரதமர் வோங், “மனிதநேயப் பொருள்கள்மீது விதித்துள்ள கட்டுப்பாடுகள் ஏற்றுக்கொள்ளவே முடியாது. அது அனைத்துலக மனிதநேயச் சட்டத்தை மீறியிருக்கக்கூடும் என்று நாங்கள் கருதுகிறோம். எனவே அதை நியாயப்படுத்த முடியாது,” என்றார் அவர்.
இஸ்ரேலுக்குத் தன்னைத் தற்காத்துக்கொள்ள அனைத்து உரிமைகளும் உண்டு என சிங்கப்பூர் எப்போதும் கூறிவந்துள்ளபோதும் அது எல்லை மீறி சென்றுவிட்டது என்றும் அதன் செயல்கள் மோசமான மனிதநேய பேரிடரை ஏற்படுத்தி இருக்கிறது,” என்றார் பிரதமர் வோங்.
நாடாளுமன்றத்தில் சிங்கப்பூரும் பிரான்ஸும் இணைந்து செய்தியாளர் கூட்டத்தை நடத்தின. அதில் தற்காப்பு, மதிநுட்பம், அணுவாற்றல் ஆகிய துறைகளில் உறவை வலுப்படுத்துவது குறித்து பேசப்பட்டது.
உள்ளூர், வெளியூர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் வோங், இரு நாட்டுக் கொள்கை மூலம் தாய்நாடு மீதுள்ள பாலஸ்தீன மக்களின் உரிமைகளுக்கு சிங்கப்பூர் ஆதரவளிப்பதை வலியுறுத்தினார்.
உலக நாடுகளுடன் இணைந்து சண்டையை நிறுத்தும்படியும் மனிதநேய உதவிகள் தடையின்றி விநியோகம் செய்யப்படும்படியும் சிங்கப்பூர் அழைப்பு விடுப்பதாக அவர் குறிப்பிட்டார்.
போரை நிறுத்தவும் இரு நாட்டுக் கொள்கைக்கான திட்டங்களை வகுக்கவும் அனைத்துலக முயற்சிகள் இருப்பதைச் சுட்டிய திரு வோங், சண்டைக்கான தீர்வுகள் பற்றி ஜூன் மாதம் நடைபெறவிருக்கும் அனைத்துலக கலந்துரையாடலில் சிங்கப்பூரும் பங்கேற்கவிருப்பதாகச் சொன்னார். பிரான்ஸும் சவுதி அரேபியாவும் அதை இணைந்து நடத்துகின்றன.
இஸ்ரேல்மீது ஐரோப்பிய ஒன்றியம் வர்த்தகத் தடைகள் விதிக்குமா என்று திரு மெக்ரோனிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், இனி வரும் நாள்களில் இஸ்ரேல் அரசாங்கம் எடுக்கும் முடிவுகளைப் பொறுத்து அது அமையும் என்றார்.
தொடர்புடைய செய்திகள்
“உலகம் முழுவதிலிருந்தும் வரும் மனிதநேய உதவிப் பொருள்களை இஸ்ரேலிய ராணுவம் தடுத்துவைத்துள்ளது. இது ஏற்க முடியாது,” என்று திரு மெக்ரோன் குறிப்பிட்டார்.
“இனிவரும் நாள்களில் காஸாவில் உள்ளா மனிதநேய நிலவரம் குறித்து சாதகமான முடிவு வரவில்லை என்றால் எங்கள் ஒருமித்த நிலைப்பாட்டை உறுதிப்படுத்தவேண்டும்,” என்று திரு மெக்ரோன் மேலும் தெரிவித்தார்.
ஐரோப்பா வர்த்தகத் தடைகளை விதிக்கக்கூடும் என்ற அவர், இஸ்ரேல் அதன் நிலைப்பாட்டை மாற்றி உதவிப் பொருள்களைக் காஸாவுக்குள் அனுமதிக்கும் என்று நம்புவதாகச் சொன்னார்.

