அடையாள எண் வெளியான விவகாரம்; அதிகாரிகளின் செயல்திறன் மதிப்பீடு, ஊக்கத்தொகை குறைக்கப்படும்

3 mins read
49d990d7-ad3e-4249-9e00-5a4f200ef66c
அதிகாரிகள் மீது பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. - கோப்புப் படம்: பெரித்தா ஹரியான்

சிங்கப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அரசாங்க இணையவாசலிலிருந்து அடையாள அட்டை எண்கள் பகிரங்கமாக வெளியான விவகாரத்தில் அதில் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவிருக்கிறது.

ஆலோசனைகள், மறுபயிற்சி, செயல்திறன் மதிப்பு மற்றும் செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத் தொகை குறைப்பு உள்ளிட்ட பொருத்தமான நடவடிக்கைகளை அவர்கள் எதிர்நோக்குகிறார்கள்.

‘அக்ரா’ எனும் கணக்கியல், நிறுவனக் கட்டுப்பாட்டு ஆணையத்தின்கீழ் செயல்படும் ‘பிஸ்ஃபைல்’ தேடல் தளத்தில் அடையாள எண்கள் மறைக்கப்படாமல் வெளியிடப்பட்டன.

2024 டிசம்பர் 9ஆம் தேதி நடந்த அந்தச் சம்பவம் குறித்து விசாரித்த குழு, கணக்கியல், நிறுவனக் கட்டுப்பாட்டு ஆணையத்துக்கும் (அக்ரா) தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சுக்கும் இடையே தகவல் தொடர்பில் இருந்த இடைவெளியும், செயல்முறைகளில் இருந்த குறைபாடுகளையும் கண்டுபிடித்தது.

பிப்ரவரி 6ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பேசிய மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன், தீங்கிழைக்கும் நோக்கத்தில் வேண்டுமென்றே அதிகாரிகள் தவறாகச் செயல்படவில்லை என்பதை விசாரணைக் குழு கண்டுபிடித்துள்ளதாகத் தெரிவித்தார்.

ஆனால் அவர்களுடைய தீர்வு, செயல்முறைகள் போதுமான அளவில் இல்லை என்றார்.

மார்ச் 3ஆம் தேதி அன்று வெளியிடப்பட்ட மறு ஆய்வு அறிக்கையில், தகவல் மற்றும் மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சிடமிருந்து தெளிவான தகவல்களைப் பெறுவது உட்பட அரசாங்க அமைப்புகள் இன்னமும் சிறப்பாகச் செய்திருக்கக்கூடிய ஆறு நிகழ்வுகள் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன.

அங்கீகாரத்திற்காக அடையாள எண்களைப் பயன்படுத்துவதை நிறுத்தும் அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து பல்வேறு அமைப்புகளுக்கு வழங்கப்பட்ட கொள்கைரீதியிலான தகவல்களில் அமைச்சும் தெளிவில்லாமல் இருந்தது. இது, குழப்பத்திற்கு வழிவகுத்தது. இதன் விளைவாக அக்ராவின் ‘பிஸ்ஃபைல்’ இணையவாசலில் அடையாள அட்டை எண்கள் முழுமையாக வெளியாகின.

இந்தக் குறைபாடு ஏற்படுவதற்கு நேரடியாக பங்களித்த அதிகாரிகள், மேற்பார்வை, வழிகாட்டும் பொறுப்பில் உள்ள மூத்த அதிகாரிகள் ஆகியோர் பொறுப்பேற்கிறார்கள் என்று திரு டியோ மதிப்பாய்வு குறித்த அமைச்சின் அறிக்கையில் தெரிவித்தார்.

பிப்ரவரி 25ஆம் தேதி மறுஆய்வுக் குழு, தனது அறிக்கையை பொதுத் துறை தரவு ஆளுமைப் பிரிவுக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான திரு டியோவிடம் சமர்பித்தது. அவர், ஆய்வின் கண்டுபிடிப்புகளை ஏற்றுக்கொண்டு மறுநாள் பிரதமர் லாரன்ஸ் வோங்கிடம் அறிக்கையை தாக்கல் செய்தார்.

அதிகாரிகளின் பொறுப்பு குறித்து பேசிய திரு டியோ, அக்ரா மற்றும் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சில் உள்ள அறிவார்ந்த தேச முயற்சிகளை மேற்பார்வையிடும் அரசியல் அலுவலக பொறுப்பாளர்கள் தங்கள் பொறுப்பின் கீழ் உள்ள அமைப்புகளுக்கு ஒட்டுமொத்த பொறுப்பைக் கொண்டுள்ளனர் என்றார். “ஆனால் இந்தக் குறைபாட்டில் குறிப்பிட்ட அல்லது நேரடியாக பொறுப்பு இருந்ததா என்பதையும் பொருட்படுத்தாமல் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோவும் பிரதமர் அலுவலக அமைச்சர் மற்றும் நிதிக்கான இரண்டாம் அமைச்சர் இந்திராணி ராஜாவும் இதற்குப் பொறுப்பு ஏற்றுக்கொண்டு பகிரங்கமாக சம்பவத்திற்கு மன்னிப்புக் கேட்டுள்ளனர்.

“தற்போது தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சின்கீழ் செயல்படும் அறிவார்ந்த தேசம் மின்னிலக்க அரசாங்க அலுவலகத்தின் நிரந்தரச் செயலாளர்களும் இந்தக் கொள்கையை அமல்படுத்தியதால் பொறுப்பேற்கிறார்கள்.

“அதே சமயத்தில் அக்ரா தலைமை நிர்வாகியான சியா டெர்ன் ஹுவே மின், புதிய பிஸ்ஃபைல் இணையவாசலை வடிவமைத்து செயல்படுத்தியதால் பொறுப்பாகிறார்,” என்று திரு டியோ மேலும் தெரிவித்தார்.

மறு ஆய்வு, ஒரு ஒழுங்க நடவடிக்கை அல்ல என்று கூறிய அவர், அதிகாரிகள் மீதான நடவடிக்கை சம்பந்தப்பட்ட அமைப்புகளால் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.

பொதுச் சேவை துறை, அதன் அதிகாரிகளை உயர் தரமான நடத்தையில் வைத்திருக்கும் என்று திரு டியோ வலியுறுத்தியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்