ஜோகூரின் நிலவழி எல்லைகளில் குடிநுழைவு சுங்கச்சாவடிகளை கியூஆர் குறியீட்டைக் கொண்டு மட்டும் கடக்க வகைசெய்யும் முறை சோதிக்கப்பட்டு வருகிறது.
முதல் நாளில் பயணிகள் சிலர் பிரச்சினைகளை எதிர்நோக்கியிருக்கின்றனர்.
கியூஆர் குறியீட்டை வருடி மட்டும் குடிநுழைவு சுங்கச்சாவடிகளைக் கடக்க மலேசியாவின் மைநைஸ் (MyNIISE) செயலியில் பதிவுசெய்ய வேண்டும். அதைச் செய்வதில் சிங்கப்பூரர்கள் சிலர் பிரச்சினைகளை எதிர்நோக்கினர்.
பாதிக்கப்பட்ட சிங்கப்பூரர்களில் ஒருவரான தனியார் வாடகை கார் ஓட்டுநர் மேகநாதன் மேகராஜன், 45, மலேசிய தொலைத்தொடர்புக் கட்டமைப்பைப் பயன்படுத்தித் தான் அச்செயலியில் பதிவுசெய்ய முயற்சி செய்திருக்கிறார். ஆனால், முதற்கட்ட பக்கத்திலேயே (loading page) தான் சிக்கிக்கிகொண்டதாக அவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.
“(தொலைத்தொடர்பு) கட்டமைப்பு மெதுவாக இயங்கியிருக்கலாம். எனினும், 10 நிமிடங்கள் காத்திருந்த பிறகு நான் முயற்சியைக் கைவிட்டுவிட்டேன்,” என்றார் அவர்.
கடப்பிதழின்றி கியூஆர் குறியீட்டை மட்டும் வருடிக் குடிநுழைவு சுங்கச்சாவடியைக் கடக்க வகைசெய்யும் முறையை மலேசியா சோதித்து வருகிறது. தனிநபர்கள், குழுவாகப் பயணம் செய்வோர் என இருவகை பயணிகளுக்கும் இது பொருந்தும்.
திங்கட்கிழமை (செப்டம்பர் 22) தொடங்கிய இச்சோதனை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 28ஆம் தேதிவரை ஜோகூர் பாருவின் இரு நிலவழி எல்லைகளான பங்குனான் சுல்தான் இஸ்கந்தர், காம்பிளக்ஸ் சுல்தான் அபு பாக்கர் ஆகியவற்றில் இருக்கும் சில சாலைத் தடங்களில் சோதிக்கப்படும். கியூஆர் குறியீட்டுக் குடிநுழைவுக் கடப்பு முறையை முதன்முறையாகப் பயன்படுத்தும் பயணிகள் மை நைஸ் செயலியில் பதிவுசெய்ய வேண்டும்.
செயலியில் வெற்றிகரமாகப் பதிவுசெய்த சிங்கப்பூர் பயனர்கள், மலேசிய தொலைத்தொடர்புக் கட்டமைப்பைப் பயன்படுத்தியபோதுதான் தங்களால் அவ்வாறு செய்ய முடிந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கியூஆர் குறியீட்டு முறையைக் கொண்டு வெற்றிகரமாக காம்பிளக்ஸ் சுல்தான் அபு பாக்கர் நிலவழி எல்லையைக் கடந்தது.
இச்சோதனையின் முதற்கட்டத்தில் பங்குனான் சுல்தான் இஸ்கந்தரில் 16 கார் சாலைத் தடங்கள், காம்பிளக்ஸ் சுல்தான் அபு பாக்கரில் 12 கார் சாலைத் தடங்கள் ஆகியவற்றில் மட்டும்தான் மைநைஸ் செயலியைப் பயன்படுத்த வசதி உள்ளது என மலேசிய உள்துறை அமைச்சு கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 20) குறிப்பிட்டது.

