தீபாவளியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 1) நடைபெற்ற இஸ்தானா பொது வரவேற்பு நிகழ்வில், மாற்றுத்திறனாளிகளுக்கும் எளிதில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளோர்க்குமான அனைவரையும் உள்ளடக்கும் வேலைவாய்ப்பு முக்கிய இடத்தைப் பிடித்தது.
வழக்கமாக, நேரடிப் படைப்புகள், குடும்பத்தினருக்கு உகந்த நடவடிக்கைகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு நடத்தப்படும் அந்நிகழ்வில் இத்தகைய முயற்சிகள் இடம்பெற்றது இதுவே முதன்முறை.
நிகழ்வில் உதவி தேவைப்படும் சமூகத்தினரைப் பற்றியும் அத்தகையோர் வேலைதேடுவதில் எதிர்கொள்ளும் தடைகளைப் பற்றியும் வருகையாளர்கள் அதிகம் தெரிந்துகொண்டனர்.
அதிபர் தர்மன் சண்முகரத்னமும் அவரின் துணைவியார் ஜேன் இத்தோகியும் அந்நிகழ்வில் கலந்துகொண்டு, அங்குச் சாவடிகள் அமைத்திருந்த சமூக அமைப்புகளுடனும் அனைவரையும் உள்ளடக்கும் நிறுவனங்களுடனும் கலந்துரையாடினர்.
அவற்றில் மாற்றுத்திறனாளிகளுக்கு அர்த்தமுள்ள வேலைவாய்ப்பைப் பெற்றுத்தர உதவும் ‘இன்குளூஸ்’ (Inclus) சமூகத் தொழில்நிறுவனமும் வசதி குறைந்தோர்க்குத் தங்குமிட வசதியும் வேலைவாய்ப்பு ஆதரவும் வழங்கும் ‘நியூ ஹோப் சமூகச் சேவை’ அமைப்பும் அடங்கும்.
வசதி குறைந்தோர்க்கு வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதற்காக ‘நோவோட்டல் சிங்கப்பூர் ஆன் ஸ்டீவன்ஸ்’ (Novotel Singapore on Stevens), ‘மெர்கியோர் சிங்கப்பூர் அன் ஸ்டீவன்ஸ்’ (Mercure Singapore on Stevens) ஆகிய இரு ஹோட்டல்களுடன் நியூ ஹோப் அமைப்பு இணைந்து பணியாற்றியது.
ஆகச் சிறந்த ஒருவரைத் தேடுவதற்குப் பதிலாக, ஒவ்வொரு பணிக்கும் என்ன தேவை என்பதை அடிப்படையாகக் கொண்டு, தனிமனிதர்களின் திறமைக்கு ஏற்ப அப்பணிகளை வழங்க ஹோட்டல்கள் நடவடிக்கை எடுத்தன என்று அவ்விரு ஹோட்டல்களில் வட்டார இயக்குநராகப் பணிபுரியும் லெஸ்லி லெனஸ் தெரிவித்தார்.
இஸ்தானாவில் நடைபெற்ற சமூகச் சந்தையிடத்திற்குச் சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனத்தின் அறநிறுவனம் ஏற்பாடு செய்தது. நாளின் தொடக்கத்தில், அறநிறுவனத்தின் புரவலருமான அதிபர் தர்மன், ‘எம்ப்ளாய்வெல்: வாக் ஃபார் வொர்க் 2026’ (EmployWell: Walk for Work 2026) நடைப்பயணத்தைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
முதன்முறையாக இஸ்தானா வளாகத்தில் பல்வேறு பகுதிகள் வழியாக நடத்தப்பட்ட அந்த அறநிதி நடைப்பயணத்தில், 110க்கும் மேற்பட்ட நிறுவனங்களைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
