தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அரசுத் தரப்பு சாட்சிகளின் வாக்குமூலங்களைப் பெற ஈஸ்வரன் முயற்சி

2 mins read
32d6016a-c6b3-4fe8-b24d-3ff17e16f996
முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன், ஜூலை 5ஆம் தேதியன்று தமது வழக்கறிஞருடன் நீதிமன்றத்தைச் சென்றடைந்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன், புலன் விசாரணை அதிகாரிகள் நேர்காணல் செய்த அனைத்து 56 சாட்சிகளின் வாக்குமூலங்களையும் அரசுத் தரப்பிடமிருந்து பெறும் முயற்சியில் ஜூலை 5ஆம் தேதி நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளார்.

ஈஸ்வரன் தற்போது 35 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.

அவர் காலை 9.30 மணி அளவில் அவரது தற்காப்பு வழக்கறிஞர்கள் குழுவுடன் உயர் நீதிமன்றத்தைச் சென்றடைந்தார்.

56 சாட்சிகள் அடங்கிய பட்டியலையும் வழக்கில் அவர்களின் பங்கு குறித்தும் சமர்ப்பித்துள்ளதாகக் கூறிய அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள், அந்த சாட்சிகளின் வாக்குமூலங்களைக் கொடுக்கும் கட்டாயத்தில் தாங்கள் இல்லை என்று வாதிட்டனர்.

நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்ட ஏழு அரசுத் தரப்பு சாட்சிகளில் ஒருவர் ஈஸ்வரனின் மனைவி டேய்லர் கே மேரி.

லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு அவரிடமிருந்து ஏழு வாக்குமூலங்களைப் பெற்றதாக அரசுத் தரப்பு கூறியது.

ஈஸ்வரன் எதிர்நோக்கும் 35 குற்றச்சாட்டுகளில் 27, ஹோட்டல், சொத்து தொழிலதிபர் ஓங் பெங் செங் தொடர்பானவை.

எட்டு குற்றச்சாட்டுகள் ‘லம் சாங் ஹோல்டிங்ஸ்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டேவிட் லம் கொக் செங் தொடர்பானவை.

வழக்கு விசாரணையின்போது அரசுத் தரப்பு அழைக்கத் திட்டமிட்டுள்ள அனைத்து சாட்சிகளின் வாக்குமூலங்களையும் பதிவுசெய்ய உயர் நீதிமன்றம் அரசுத் தரப்புக்கு உத்தரவு பிறப்பிக்கவேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் தவிந்தர் சிங் வழிநடத்தும் ஈஸ்வரனின் சட்டக் குழு முன்னதாக வாதிட்டது.

ஆனால், அந்தக் கோரிக்கை ஜூன் 11ஆம் தேதி நிராகரிக்கப்பட்டது.

இருப்பினும், அந்த முடிவை மறுஆய்வு செய்வதற்கு தற்காப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் பதிவு செய்தனர். அதன் தொடர்பில், ஜூலை 5ஆம் தேதி நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

அரசுத் தரப்பு குற்றச்சாட்டுகளை மட்டுமே கொடுத்துள்ள நிலையில், தமது தரப்பு எவ்வாறு வாதத்தை முன்வைக்க முடியும் என்று திரு சிங் கேள்வி எழுப்பினார்.

அரசுத் தரப்பின் ஆதாரங்களைத் தெரிந்துகொள்ளும் உரிமை ஈஸ்வரனுக்கு உண்டு எனத் திரு சிங் கூறினார்.

திரு சிங் கூறிய கருத்துகளில் பாதிக்கும் மேலானவற்றைத் தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அரசுத் தரப்பை வழிநடத்தும் மூத்த வழக்கறிஞர் டாய் வெய் ஷியோங் சொன்னார். அரசுத் தரப்பு தற்காப்பு வழக்கறிஞர்களிடம் போதுமான தகவல்களைக் கொடுத்திருப்பதாகத் திரு டாய் கூறினார்.

நீதிபதி வின்சன்ட் ஹூங், வழக்கு விசாரணையை பின்னொரு தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்