அதிநவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் தட்டியெழுப்பும் புத்தாக்கத் திரைப்படத்தை இயக்கி, தயாரித்துள்ள இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான், ஞாயிற்றுக்கிழமையன்று (மே 11) சிங்கப்பூரில் அத்திரைப்படத்தை வெளியிட்டார்.
மெய்நிகர்த் தொழில்நுட்பத்தைக் கொண்டு இதுவரை திரைத்துறையில் காணாத வகையில் கடந்த ஏழாண்டுகளாகத் தயாரிக்கப்பட்டு வந்த இத்திரைப்படத்தை சிங்கப்பூரில் வெளியிட்டுள்ளது தமது கலைப்பயணத்தை முழுமையாக்கியுள்ளதாகக் கூறினார் அவர்.
1986ஆம் ஆண்டு முதன்முதலில் சிங்கப்பூருக்கு வந்த தமது அனுபவத்தைப் பகிர்ந்த அவர், சீக்குவென்சர், சேம்ப்ளர் என இசைக்கருவிகளை வாங்கிய முதல் இடம் சிங்கப்பூர் என்றார். அந்த நாட்டில் தமது புத்தாக்கத் திரைப்படத்தை வெளியிட்டுள்ளது முழு வட்டமாக முழுமைப் பெற்றுள்ளது என்று பெருமிதம் கொண்டார்.
‘லெ மஸ்க்’ எனும் இத்திரைப்படத்தின் வெளியீட்டு விழா சன்டெக் சிட்டி கோல்டன் வில்லேஜ் திரையரங்கில் நடைபெற்றது. அதற்குப் பின்னர் தமிழ் முரசு நாளிதழுக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் அவர் தமது திரைத் தயாரிப்பு அனுபவங்களையும் தமது சிந்தனைகளையும் பகிர்ந்தார்.
ஆங்கில மொழியில் அனைத்துலக ரசிகர்களுக்காக எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம், இந்தியாவில் தயாரிக்கப்பட்டு உலகிற்குக் கொடுக்கப்பட்டுள்ள பங்களிப்பாகக் கருதுவதாக அவர் தெரிவித்தார்.
“நான் ஒரு தமிழன் என்பதில் பெருமை. அதற்காகத் தமிழிலே நான் படம் தயாரிக்க வேண்டும் என்பதில்லை. உலகையே பிரம்மிக்க வைக்கும் கலைப்படைப்பைப் படைப்பதால் தமிழனின் பெயர் உலக அரங்கில் நிலைநாட்டப்படும்,” என்று கூறினார் ரகுமான்.
பெரிய திரையில் இல்லாமல் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டுள்ள தனி இருக்கையில் அமர்ந்து சுழன்றும் நகர்ந்தும் நுகர்ந்தும் ரசிக்கும் அனுபவம் மக்களுக்குக் கிடைக்கிறது.
தம் மீது அளப்பரிய அன்பு கொண்டிருக்கும் சிங்கப்பூர் ரசிகர்கள் இந்தத் திரை அனுபவத்தைப் பெற்று எல்லா இனத்தையும் சேர்ந்த தங்கள் நண்பர்களிடம் இதுபற்றி கூறி அவர்களையும் பார்க்க வைக்கும் தூதுவர்களாக விளங்கவேண்டும் என்று இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் கேட்டுக்கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
“என் ரசிகர்களே என்னை மேலும் மேலும் பணி செய்து கடின உழைப்பாளியாக ஆக்கியவர்கள். அவர்களால்தான் பாசமும் அன்பும் கலந்து பேரார்வத்துடன் தொடர்ந்து உழைக்கிறேன்,” என்று திரு ரகுமான் கூறினார்.
திறந்த மனப்பான்மையுடன் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்வையாளர்கள் இதைக் கண்டு உணர வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார் திரு ரகுமான்.
37 நிமிடங்கள் ஓடும் இத்திரைப்படத்தை சிங்கப்பூரில் ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதிவரை காணலாம். lemusk.com எனும் இணையப்பக்கத்தில் மேல்விவரங்களைப் பெறலாம்.


