தலைவர்களின் முடிவுகளுக்குச் சமூக அமைப்புகள் ஆதரவளிப்பது முக்கியம்: முரளி பிள்ளை

தலைவர்களின் முடிவுகளுக்குச் சமூக அமைப்புகள் ஆதரவளிப்பது முக்கியம்: முரளி பிள்ளை

2 mins read
acf38e1e-179c-4908-adb9-5e37fec450a6
ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 19) நடைபெற்ற லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் மரபுடைமைச் சங்கத்தின் இந்தியப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினராகச் சட்ட, போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் முரளி பிள்ளை கலந்துகொண்டார். - படம்: கீர்த்திகா ரவீந்திரன்

உலகம் நெருக்கடிகளைச் சந்தித்துவரும் இத்தருணத்தில், சிங்கப்பூர்த் தலைவர்களின் முடிவுகளுக்குப் பின்னால் சமூக அமைப்புகள் ஒன்றுபடுவது முக்கியம் என்று சட்ட, போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் முரளி பிள்ளை கூறியுள்ளார்.

ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து வணிகக் கப்பல்களும் ஆவணங்களைச் சமர்ப்பிக்கவேண்டும் என்றும் கட்டணம் செலுத்தவேண்டும் என்றும் அண்மையில் விதிமுறை நடப்புக்கு வந்துள்ளதைச் சுட்டிக்காட்டினார் திரு முரளி.

“இது, சிங்கப்பூருக்குப் பின்விளைவுகளை ஏற்படுத்தலாம்,” என்றார் அவர்.

எனவே, சிங்கப்பூர் ஒன்றுபட்டு இதுபோன்ற சவால்களுக்குக் கொள்கை அடிப்படையில் தீர்வுகாண்பது மிகவும் முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் மரபுடைமைச் சங்கத்தின் இந்தியப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார் திரு முரளி.

பல்வேறு இந்தியக் கலாசார சமூகங்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட 800 பேர், இசை, நடனம், விருந்து ஆகியவை நிறைந்த நிகழ்ச்சிக்காக ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 19) மாலை ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலின் பிஜிபி மண்டபத்தில் ஒன்றுகூடினர்.

மொத்தம் 10 இந்தியக் கலாசாரச் சங்கங்கள் 11 அங்கங்களைப் படைத்திருப்பது இவ்வாண்டின் புதிய அம்சம் என்று ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் எலிஷா வாணி பெருமாள் கூறினார்.

“வெவ்வேறு இந்தியக் கலாசாரங்களைச் சேர்ந்தவர்கள் ஒருவருக்கொருவரின் மரபு, கலாசாரத்தைப் பற்றி அறிந்துகொள்வதற்கான ஒரு வாய்ப்பை இந்தப் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் அளிக்கின்றன,” என்றார் அவர்.

கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்துடன் (சிண்டா) லிஷா இணைந்து ‘சிண்டா பேருந்து’ எனும் நடமாடும் வாகனத்தை அறிமுகப்படுத்தியது.

மக்கள் ஈடுபாட்டை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் சிண்டாவின் வளங்கள், திட்டங்களைக் குடியிருப்பு வட்டாரங்களுக்கு அந்தப் பேருந்து கொண்டுசெல்லும்.

குறிப்பாக, இடப்பற்றாக்குறையால் சிரமப்படும் வசதி குறைந்த இந்தியக் குடும்பங்களுக்கு சிண்டாவின் சேவைகளை கொண்டுசேர்க்கும் நோக்கத்தில், அந்தப் பேருந்து செயல்படும் என்று தெரிவித்தார் சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன்.

“மாணவர்களுக்கான வாசிப்புத் திட்டங்கள், மூத்தோருக்கான சுகாதாரப் பரிசோதனைகள் போன்ற திட்டங்களைச் சீரான முறையில் சிண்டா அமைப்பால் முன்னோக்கி எடுத்துச்செல்ல முடியும்,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்