நிறுவனங்கள் துணிவுடன் முடிவெடுப்பது முக்கியம்: துணைப் பிரதமர் கான்

நிறுவனங்கள் துணிவுடன் முடிவெடுப்பது முக்கியம்: துணைப் பிரதமர் கான்

2 mins read
69a09e67-b39c-41a5-91a4-3d033b222f95
துணைப் பிரதமர் கான் கிம் யோங். - படம்: எஸ்பிஎச் மீடியா

பிளவுபட்ட உலகில், நிறுவனங்கள், உத்திபூர்வ முடிவெடுப்பதும் அவற்றைத் திறம்படச் செயல்படுத்துவதும் முக்கியம் என்று துணைப் பிரதமர் கான் கிம் யோங் கூறியுள்ளார்.

தற்போதைய நிச்சயமற்ற சூழலில் சவால்களைச் சமாளிப்பதிலும் நீண்டகால வாய்ப்புகளைக் கைப்பற்றுவதிலும் நிறுவனங்களுக்கு ஆதரவு தேவைப்படுகிறது; சிங்கப்பூரைப் பொறுத்தவரை அரசாங்கம் அவற்றின் தொடர்பில் நிறுவனங்களுக்கு எவ்வாறு உதவுகிறது என்பதுதான் கேள்வி என்றார் அவர்.

அவற்றை உள்ளடக்கும் வகையில், நாட்டின் பொருளியல் உத்திபூர்வ மறுஆய்வு அதன் வரைவுத்திட்டத்தைப் புதுப்பிக்கும் என்று அவர் சொன்னார்.

உலகத் தலைவர்களும் தொழில்முனைவர்களும் கலந்துகொண்ட ‘சிஎன்பிசி கவரேஜ் லைவ் 2026’ எனும் நிகழ்ச்சியில் புதன்கிழமை (ஏப்ரல் 22) திரு கான் பேசினார்.

நிறுவனங்களின் நம்பகமான பங்காளியாகச் சிங்கப்பூரை நிலைநிறுத்த வரைவுத்திட்டம் முனையும்.

அதன்படி மூன்று அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அவையாவன:

* சந்தைகளுக்கு இடையில் வர்த்தகத் தொடர்புகளைக் கட்டிக்காத்தல்

* நிறுவனங்கள், தொழில்நுட்பத்தைத் திறம்படப் பயன்படுத்த உதவுதல்

* எரிசக்தி உருமாற்றத்தில் நிறுவனங்கள் முன்கூட்டியே நிலைநிறுத்திக்கொள்ளக் கைகொடுத்தல்

மூன்று அம்சங்களுக்குமே நம்பிக்கைதான் ஆதாரம் என்றார் துணைப் பிரதமர் கான். சந்தைகள், கட்டமைப்புகள், பங்காளித்துவ நிறுவனங்கள் ஆகியவற்றுடன் நம்பிக்கையோடு செயல்பட வர்த்தகங்களுக்கு அது துணைபுரியும்.

வர்த்தகத் தொடர்பைப் பொறுத்தவரை, வட்டாரங்களுக்கு இடையில் சிங்கப்பூர், பாலங்களை உருவாக்கிவருகிறது; ஆசியான் நாடுகளுக்கும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பங்காளிகளுக்கும் இடையில் தொடர்பை வலுப்படுத்தவும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்றார் திரு கான்.

உள்கட்டமைப்பிலும் தரநிலைகளிலும் சிங்கப்பூர் முதலீடு செய்கிறது. பொருள்கள், மூலதனம், தரவுகள் முதலியவை சந்தைகளுக்கு இடையில் சீரான முறையில் கைமாறுவதற்கு அது வழிவிடும்.

தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை, செயற்கை நுண்ணறிவைப் பெரிய அளவில் செயல்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்துவதாகத் திரு கான் சொன்னார்.

நீண்டகால எரிசக்தி உருமாற்றத்தில் நிறுவனங்கள் பங்கெடுக்கச் சிங்கப்பூர் உதவும் என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்