சிங்கப்பூர் தமிழர்களிடத்தில், குறிப்பாக மாணவர்கள், இளையர்களிடத்தில் தமிழ்மொழியை வாழும் மொழியாக வைத்திருப்பது முக்கியமென்று செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் வளர்தமிழ் இயக்கத்தின் ஆலோசகர் குழு தலைவருமான திரு விக்ரம் நாயர் வலியுறுத்தியுள்ளார்.
வளர்தமிழ் இயக்கத்தின் ஏற்பாட்டில், டெசென்சன் சாலையில் அமைந்துள்ள அரசாங்க சேவை மன்ற வளாகத்தில் புதன்கிழமை (மே 28) நடந்த விருந்து நிகழ்ச்சியில் உரையாற்றியபோது அவர் அவ்வாறு சொன்னார்.
“நம் மொழிதான் நம் அடையாளம். அதனைத் தொடர்ந்து கட்டிக்காக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது,” என்று அங்கு கூடியிருந்த இவ்வாண்டு தமிழ்மொழி விழாவின் இணை ஏற்பாட்டாளர்களிடம் திரு விக்ரம் நாயர் கூறினார்.
இவ்வாண்டு ‘இளமை’ என்ற கருப்பொருளுடன் 19ஆவது முறையாக நடந்தேறிய தமிழ்மொழி விழாவில் 46 இணை ஏற்பாட்டு அமைப்புகளால் 45 நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இவ்வாண்டு விழாவில் நான்கு புதிய இணை ஏற்பாட்டாளர்கள் இணைந்தனர் என்றும் தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் புதிய பங்கேற்பாளர்களைச் சென்றடையும் நோக்குடன் மேலும் பல புதிய இணை ஏற்பாட்டாளர்கள் இணைவர் என்றும் நம்புவதாகக் கூறினார் வளர்தமிழ் இயக்கத்தின் துணைத் தலைவர் ஜோதி மாணிக்கவாசகம்.
அடுத்து வரும் ஆண்டுகளிலும் அவர்கள் தொடர்ந்து அற்புதமான நிகழ்ச்சிகளை வழங்குவதைக் காணக் காத்திருப்பதாக அவர் கூறினார்.
“இவ்வாண்டு 74% நிகழ்ச்சிகள் மாணவர்கள், இளையர்களுக்காக நடைபெற்றன. கிட்டத்தட்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும் மாணவர்களின் பங்கேற்பு இருந்தது. மாணவர்கள், இளையர்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி,” என்றும் திரு ஜோதி மாணிக்கவாசகம் தமது உரையில் குறிப்பிட்டார்.
சுவையான இரவு உணவுடன் கவிப்பெருக்கு குழு வழங்கிய கவிதைப் படைப்பு விருந்தைச் சிறப்பாக நிறைவு செய்தது.

