‘ஏஐ’ தொழில்நுட்பத்தால் ஊழியர்களுக்கு வாய்ப்புகள் அதிகம்: தொழில்துறை நிபுணர்கள்

பிரதமரின் மே தினப் பேரணி குறித்த கலந்துரையாடல்

‘ஏஐ’ தொழில்நுட்பத்தால் ஊழியர்களுக்கு வாய்ப்புகள் அதிகம்: தொழில்துறை நிபுணர்கள்

2 mins read
f9442554-167f-4123-b163-9cce070651d3
‘சந்திப்போம் சிந்திப்போம்’ தொடரின் கலந்துரையாடலில் பங்கேற்றோர்: (இடமிருந்து) கலந்துரையாடலை வழிநடத்திய தமிழ் முரசின் மூத்த நிர்வாக உதவி ஆசிரியர் சபா.முத்து நடராஜன், முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் கே.கார்த்திகேயன், ‘குளோசப்’ குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வெங்கடே‌‌ஷ் பாபு, ‘சார்ட்ஸ்வுட் அசோசியேட்ஸ்’ நிறுவனத்தின் செயலாக்கப் பிரிவுத் தலைவர் பத்மபிரியா - படம்: த.கவி

மாறிவரும் உலகச் சூழலுக்கு ஏற்ப ஊழியர்கள், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைக் கற்றுத் தேர்ச்சி பெறுவது முக்கியம் என்று தொழில்துறையினர் வலியுறுத்தி இருக்கின்றனர்.

கற்றுக்கொள்ளத் தயங்கினால், பின்தங்கிவிடும் ஆபத்து இருப்பதாக அவர்கள் எச்சரித்தனர்.

பிரதமரின் மே தினப் பேரணி உரை குறித்து எஸ்பிஎச் அரங்கில் மே 7ஆம் தேதி தமிழ் முரசு நடத்திய கலந்துரையாடலில் அந்தக் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

‘சந்திப்போம் சிந்திப்போம்’ எனும் நடப்பு விவகாரத் தொடரின் நான்காம் கலந்துரையாடல் நிகழ்ச்சி அது.

செயற்கை நுண்ணறிவை மிரட்டலாகவும் வாய்ப்பாகவும் பார்ப்பதாகக் கூறினார், முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினரும் பெட்ரோலியத் துறைத் தொழிற்சங்கத்தில் கௌரவ ஆலோசகருமான திரு கே.கார்த்திகேயன்.

புதிய தொழில்நுட்பம் குறித்த அச்சம் ஒருசிலருக்கு இருக்கும். ஆனால் அதே நேரம், ஏராளமான வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால் உற்பத்தித்திறன் பெருகும் என்றார் அவர்.

செயற்கை நுண்ணறிவை மிரட்டலாகப் பார்க்கவில்லை என்றார் சார்ட்ஸ்வுட் அசோசியேட்ஸ் நிறுவனத்தின் செயலாக்கப் பிரிவுத் தலைவர் பத்மபிரியா.

“ஒரு நெருக்கடியின்போதுதான் ஒரு மாற்றம் வரும் என்று பலர் கூறுவார்கள். அத்தகைய நேரத்தில் புதியனவற்றைக் கற்றுக்கொள்வதைத் தவிர வேறுவழியில்லை என்ற நிலை உருவாகும். அது வேலையில் அடுத்த நிலைக்கு முன்னேற உதவியாக இருக்கும்,” என்று அவர் சொன்னார்.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம், பல மணிநேரம் எடுக்கும் வேலைகளை வெகு விரைவில் முடித்துத் தருகிறது என்று ‘குளோசப்’ குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் நிர்வாக இயக்குநருமான திரு வெங்கடே‌‌ஷ் பாபு தெரிவித்தார். ஊழியர்கள் தொடர்ந்து கற்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

கலந்துரையாடலில் ஊழியர்கள், நிறுவனங்கள் தொடர்பான மேலும் பல சுவாரசியமான அம்சங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.

அதன் முழுமையான காணொளியை இங்கே கொடுக்கப்பட்டுள்ள கியூஆர் குறியீட்டை வருடிப் பார்க்கலாம்.

குறிப்புச் சொற்கள்