தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சீனாவை மேற்கத்திய நாடுகள் புறக்கணிப்பது விவேகமன்று: மூத்த அமைச்சர் லீ சியன் லூங்

2 mins read
965c45ea-0402-409b-adff-68b583f3ca0a
எதிர்கால சீனா உலகளாவிய கருத்தரங்கில் பேசிய மூத்த அமைச்சர் லீ சியன் லூங். இந்நிகழ்ச்சியை எஸ்பிஎச் மீடியாவின் சீன ஊடகக் குழுமத்தின் தலைமை ஆசிரியர் லீ ஹுவே லெங் வழிநடத்தினார். - படம்: எஸ்பிஎச் மீடியா

சிங்கப்பூர்: மேற்கத்திய நாடுகள் சீனாவைப் புறக்கணிக்கக்கூடாது, அதே சமயத்தில் மேற்கத்திய நாடுகளைச் சீனாவும் குறைத்து மதிப்பிடக்கூடாது என்று மூத்த அமைச்சர் லீ சியன் லூங் கூறியுள்ளார்.

சனிக்கிழமை (அக்டோபர் 18) நடைபெற்ற வர்த்தகக் கருத்தரங்கில் அவர் தமது எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார்.

“சீனாவை மேற்கத்திய நாடுகள் புறக்கணிப்பது விவேகமான செயலன்று,” என்றார் அவர்.

சீனாவுக்குச் சென்றபோதெல்லாம் அங்குள்ளவர்கள் நம்பிக்கையூட்டும் கருத்துகளையும் எண்ணங்களையும் தெரிவிக்கும்போது, அமெரிக்காவிற்கு நிறைய பிரச்சினைகள் இருந்தாலும் பலம் கொண்ட நாடாக இருப்பதை அவர்களுக்கு நினைவூட்டியதாக திரு லீ கூறினார்.

அமெரிக்காவுக்கு ஏராளமான பிரச்சினைகள் இருந்தாலும், அதன் அனைத்து பலங்களும் தெரிவதில்லை. அவை மறைந்து விடவும் போவதில்லை. நீண்டகாலத்திற்கு வலிமை மிக்கதாக இருக்கும் என்று தாம் எண்ணுவதாக அவர் சொன்னார்.

சேண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு மண்டபத்தில் ‘எதிர்கால சீனா’ உலகளாவிய கருத்தரங்கில் மூத்த அமைச்சர் லீ பேசினார்.

சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையே தொடர்புகளை வலுப்படுத்தும் ‘பிஸ்னஸ் சைனா’ என்ற லாப நோக்கமற்ற அமைப்பு, இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

பார்வையாளர்களில் ஒருவர், அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர்களான டோனல்ட் டிரம்ப், கமலா ஹாரிஸ் இவர்களில் யார் அமெரிக்க-சீன உறவுக்குச் சிறந்தவர்கள் என்று கேட்டார்.

இதற்குப் பதிலளித்த திரு லீ, “இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றம் தனிப்பட்டவரின் அடிப்படையில் இல்லை. மாறாக, சீனா பெரும் சவாலாக இருக்கிறது, அமெரிக்காவிற்கு அந்நாடு நீண்ட கால அடிப்படையில் அச்சுறுத்தலாகக்கூட விளங்கலாம் என்ற ஒருமித்த கருத்தால் உருவானது,” என்று குறிப்பிட்டார்.

திருவாட்டி ஹாரிஸ் வெற்றி பெற்றால் அதிக அதிர்ச்சிகள் இல்லாத எதிர்பார்த்தபடி உறவு முன்னேறும் என்றும் திரு டிரம்ப் வெற்றி பெற்றால் எதிர்பாராத கோணங்களில் இன்னும் பல விவகாரங்களில் முன்னேற்றம் ஏற்படலாம் என்றும் திரு லீ சொன்னார்.

குறிப்புச் சொற்கள்