கடந்த ஆண்டு ஜனவரியில் இடைவிடாத மழை பெய்தாலும் இவ்வாண்டின் ஜனவரியில் அதிக மழைக்கு வாய்ப்பு இல்லை என்று சிங்கப்பூரின் வானிலை ஆய்வு நிலையம் கணித்துள்ளது.
தற்போது முதல் ஜனவரி 11 வரை மழையை எதிர்பார்க்க முடியாது என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் அது கூறியது.
மலேசிய வானிலை ஆய்வகம், ஜனவரி முற்பகுதியில் பருவ மழை பெய்யும் என்று கடந்த டிசம்பரில் எச்சரித்திருந்தது. சரவாக்கில் மோசமான வெள்ளம் ஏற்பட்டதால் ஆயிரம் பேர் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.
சிங்கப்பூரின் பருவமழைக்காலமான டிசம்பரிலும் ஜனவரியிலும் மழை பெய்வது வழக்கம்.
இந்தக் காலகட்டங்களில் இரண்டு முதல் நான்கு முறை மழை பெய்யும். ஒவ்வொன்றும் சில நாள்கள் நீடிக்கக்கூடியது.
மத்திய ஆசியா போன்ற பகுதிகளிலிருந்து வரும் குளிர்ந்த, வறண்ட காற்று தென்சீனக் கடற்பரப்பின் சூடான நீருக்குமேல் நகர்ந்து ஈரப்பதத்தை எடுத்துக் கொள்ளும்போது இது நிகழ்கிறது. மேலும் இது, அதிக மழை, பலத்த காற்று, குளிர்ந்த பருவநிலையை சிங்கப்பூருக்குக் கொண்டு வருகிறது.
2025 ஜனவரி 10ஆம் தேதி முதல் பருவமழையால் மவுண்ட்பேட்டன் ஜாலான் சீவியூவில் மூன்று மணி நேரம் வெள்ளம் ஏற்பட்டது. நான்கு நாள்களாகப் பெய்த மழையால் விமானங்கள் தாமதமாயின. சீனப் புத்தாண்டு சந்தைகளின் வியாபாரமும் பாதிக்கப்பட்டது.
கடலோரப் பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. விடாமல் பெய்த மழையால் 2.8 மீட்டர் உயரத்துக்கு அலை எழுந்தது.
தொடர்புடைய செய்திகள்
ஜனவரி 10, 11ஆம் தேதிகளில் பெய்த மழையால் மாதத்தின் சராசரியையும் மிஞ்சியது.
இவ்வாரமும் அதிக உயர்வான அலைகள் எதிர்பார்க்கப்படுகின்றன. பிற்பகலில் மூன்று மீட்டர் உயரத்திற்கு அலைகள் எழலாம்.
இருந்தாலும் மழை குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் நாடு முழுவதும் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு இல்லை என்று தேசிய சுற்றுப்புற அமைப்பின் தகவல் தெரிவிக்கிறது.

