விமான நிலைய முனையம் 1ல் எக்ஸ்ரே இயந்திரம் தீப் பிடித்ததால் புகை சூழ்ந்தது

விமான நிலைய முனையம் 1ல் எக்ஸ்ரே இயந்திரம் தீப் பிடித்ததால் புகை சூழ்ந்தது

2 mins read
9cd586be-5b2d-4bd9-9509-54692a41d02a
மின்சாரக் கோளாறு காரணமாக எக்ஸ்ரே இயந்திரம் தீப்பிடித்ததாக சாங்கி விமான நிலையக் குழுமத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். - படங்கள்: MONTANA & CHRIS/டிக்டாக்

ஆகஸ்ட் 6ஆம் தேதி சாங்கி விமான நிலைய முனையம் 1ல் எக்ஸ்ரே இயந்திரம் தீப்பிடித்ததால் பாலித் தீவுக்குச் செல்லும் விமானச் சேவை இரண்டு மணி நேரம் தாமதமானது.

டிக்டாக் தளத்தில் ஆகஸ்ட் 6ஆம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்ட ஒரு காணொளியில், முகப்பு D46ல் உள்ள எக்ஸ்‌ரே இயந்திரத்திலிருந்து கரும்புகை கிளம்பியதைக் காட்டியது. மக்கள் தூரத்திலிருந்து இதை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

அருகில் உள்ள அறிவிப்புத் திரை ஸ்கூட் TR280 என்று காட்டியது. பாலிக்குச் செல்லும் அந்த விமானம் காலை 7.10 மணிக்குப் புறப்படுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

மொண்டானா & கிறிஸ் ஆகிய பயனர்கள் பதிவேற்றம் செய்த அந்தக் காணொளியில், புறப்பாட்டு அரங்கை புகை சூழ்ந்திருப்பதையும், அங்குள்ள பயணிகள் தங்கள் மூக்கை மூடிக்கொண்டிருப்பதையும் பார்க்க முடிந்தது.

இச்சம்பவம் காலை சுமார் 6.30 மணிக்கு நிகழ்ந்தது என்று சொத்துச் சந்தை மேம்பாட்டாளர் கிறிஸ் ஹேன், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.

“சுவாசிக்க மிகவும் கடினமாக இருந்ததால் மக்கள் அந்தப் பகுதியை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. புகை முனையத்தின் இரு திசைகளிலும் குறைந்தது 75 மீட்டர் கடந்து சென்றது,” என்று 30 வயதான திரு ஹேன் கூறினார்.

30 நிமிடங்களுக்குப் பிறகு புகை அவ்விடத்தை விட்டு விலகிச் சென்றது என்றும் திரு ஹேன் மேலும் சொன்னார்.

அந்த விமானம் காலை 9.15 மணிக்குப் புறப்பட்டது என்று Flightradar24 எனும் விமானப் பாதை கண்காணிப்புத் தளம் கூறியது.

‘சிறிய தீ’ மின்சாரக் கோளாறால் ஏற்பட்டது. உடனடியாக இரண்டு விமான நிலைய ஊழியர்களால் அது அணைக்கப்பட்டது என்று சாங்கி விமான நிலையக் குழுமத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பயணிகள் விமானத்தில் ஏறுவதற்கு மற்றொரு பகுதிக்குத் திருப்பி விடப்பட்டனர். தீயினால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

தீச் சம்பவம் குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை விசாரணை நடத்தி வருகிறது.

குறிப்புச் சொற்கள்