அங் மோ கியோ வட்டாரத்தின் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் உள்ள புதிய ‘ஃபிட்லேப்’ வகுப்பறைக்குச் செல்பவர்கள் உடற்பயிற்சிக் கூடத்திற்குள் செல்லும் உணர்வைப் பெறக்கூடும்.
பாரம்பரிய வகுப்பறையாக இருந்த அந்த இடம், தற்போது விளையாட்டு நிர்வாகத்துறையில் நைட்டேக் படிப்பில் சேர்ந்துள்ள 560 மாணவர்களுக்குக் கற்றல் தளமாகத் திகழ்கிறது.
உடற்கட்டுத் துறையின் தொழில்நுட்ப முன்னேற்றங்களையும் ஆக அண்மைய நடைமுறைகளையும் பிரதிபலிக்கும் இந்தச் சூழலில் மாணவர்கள் கற்கின்றனர்.
புதுப்பிப்புப் பணி 2024 ஜூலை 24ல் இந்த இடத்திற்கான புதுப்பிப்புத் தொடங்கி இவ்வாண்டு மார்ச் மாதத்தில் நிறைவுபெற்றது.
இவ்வாண்டு ஏப்ரல் முதல் செயல்பட்டுவரும் இந்தப் புதுப்பிக்கப்பட்ட வகுப்பறையின் அதிநவீன கருவிகளைப் பயன்படுத்தி, வேகமாக மாறிவரும் போக்குகளுக்கு ஈடுகட்ட முடிவதாக விளையாட்டு அறிவியல் விரிவுரையாளர் அலிஃப் ஹாஃபிஸ் மன்சூர், 37, தெரிவித்தார்.
சுழற்சி முறையான உடற்பயிற்சிகள், செயற்கை நுண்ணறிவு வழியாக உடல் தோரனையையும் அசைவுகளையும் ஆராயும் கூறுகள் என நடைமுறை சார்ந்த கற்றலில் மாணவர்களை ஈடுபடுத்துவது இதன் நோக்கம்.
சுகாதார மதிப்பீடுகளைச் செய்தற்குப் பயிற்றுவிப்பாளர்களுக்கு உதவும் இன்பாடி ஸ்கேனர் என்ற மின்வருடிகளையும் மாணவர்கள் பயன்படுத்திப் பார்க்கலாம்.
“இவையெல்லாம் வெளியிலுள்ள உடற்பயிற்சிக்கூடங்களில் இருப்பதால் மாணவர்களும் இவற்றின்வழியாகச் சுகாதாரத் தரவுகளை ஆராய்ந்து தங்கள் வேலைப் பயிற்சிகளின்போது செயல்படுத்த நாங்கள் விரும்புகிறோம்,” என்று திரு அலிஃப் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
இந்த வசதியைப் போல விமான இயந்திரங்களைப் பராமரிக்கும் வாழ்க்கைத்தொழிலை மேற்கொள்ள விரும்பும் மாணவர்கள், மே 15ஆம் தேதி தொடங்கப்பட்டுள்ள ஆன்பார்டிங் அட் ஸ்கில் வளாகத்தைப் பயன்படுத்துகின்றனர்.
ஆண்டுதோறும் 380க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும் பயிற்சி மேற்கொள்பவர்களுக்கும் வசதியளிக்கும் இந்த வளாகம், 200 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது. ஏரோஸ்பேஸ் பொறியியல் பயிலும் மாணவர்களும் இவர்களில் அடங்குவர்.
மூன்று நுழைவாயில்கள் கொண்டுள்ள இந்த வளாகத்தில் மாணவர்கள், தொடக்கம் முதல் இறுதி வரை விமான பராமரிப்பு எவ்வாறு நடைபெறுகிறது என்பதைக் காணலாம். விமானப் பாகங்களை நன்கு சுத்தம் செய்யும் இயந்திர மனிதக் கரம் ஒன்று, இந்த வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிறப்பு அம்சமாக உள்ளது.
இயந்திர மனிதர்களும் இயந்திர மனிதத் தொழில்நுட்பமும் இந்தத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் மின்னனுவியல், தகவல் தொடர்புப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு ஜூலை முதல் செயல்பட்டு வரும் யுனிவர்சல் ‘ஆம்னிவர்ஸ் எஸ்க்பிரியன்ஸ் செண்டர்’ என்ற அதிநவீன இயந்திரவியல் வளாகத்தில் 1,000க்கும் அதிகமான மாணவர்கள், செயற்கை நுண்ணறிவு போன்ற அம்சங்களைக் கற்கின்றனர்.
இங்கு பயன்படுத்தப்படும் இயந்திர மனிதர்கள், தற்போது ஜப்பானிலுள்ள பள்ளிகளிலும் முதியோர் பராமரிப்பு இல்லங்களிலும் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

