சைனாடவுன் பகுதியில் காகங்களால் தாக்கப்பட்ட ஒருவர் உறைந்து போயிருக்கிறார்.
“அது என்னவென்றே தெரியவில்லை,” என்று காகங்களால் பலமுறை தாக்கப்பட்டு, கொத்தப்பட்டவர் கூறியுள்ளார்.
சைனாடவுனில் வழுக்கைத் தலையுடன் இருப்பவர்களை காகங்கள் குறி வைக்கின்றன என்று அண்மைய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
வெள்ளிக் கிழமை அன்று சம்பவ இடத்திற்குச் சென்ற ஏஷியாஒன் செய்தியாளர்கள் பலரைச் சந்தித்து காகங்களின் ஆட்டத்தைப் பற்றி தெரிந்து கொண்டனர்.
சாங் யெங் யிவ்வும், 67 அவர்களில் ஒருவர்.
அப்பகுதியில் நடந்துசென்றபோது மூன்று முறையாவது காகங்கள் தன்னைக் கொத்தியதாக அவர் தெரிவித்தார்.
“என் தலைக்கு மேலே அவை பறந்து சென்றன. எனக்கு என்னவென்றே தெரியவில்லை. மூன்று முறையாவது என் தலையில் அவை கொத்தியிருக்கும், என்னால் அப்போது ஒன்றும் செய்ய முடியவில்லை. அதிர்ச்சியாக இருந்தது,” என்று அவர் கூறினார்.
சைனாடவுனில் புளோக் 335ல் பீ ஹுன் உணவுக் கடையை நடத்தி வரும் சாங், பறவைகளைக் கண்டு அஞ்சவில்லை, ஆனால் கோபம் வருகிறது என்று தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
பறவைகள் மீண்டும் கொத்தாமல் பாதுகாத்துக் கொள்ள ஏதாவது செய்தீர்களா என்று கேட்டதற்கு அவர் இல்லை என்றார்.
62 வயதான டாங் மே யுயட், சாங் தாக்கப்பட்டதை நேரில் கண்டதால் அன்று முதல் பறவைகளிடம் எச்சரிக்கையாக இருப்பதாகத் தெரிவித்தார்.
ஏப்ரல் 19ஆம் தேதியிலிருந்து இதுபோன்ற தாக்குதல்களைத் தான் கவனிக்கத் தொடங்கியதாக அவர் கூறினார்.
இந்தப் பகுதி முழுவதும் காகங்கள் பறந்து செல்வதைப் பார்த்துள்ளேன். குறிப்பாக தலைமுடி இல்லாதவர்களை காகங்கள் தாக்குகின்றன என்று திருமதி டாங் சொன்னார்.
காகங்கள் பற்றிய ஒரு தகவலின்படி, மே முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் குஞ்சுகள் பறக்கக் கற்றுக்கொள்ளும் பருவத்தில்தான், அவற்றை பெற்றோர் பாதுகாக்க முயற்சி செய்யும். அப்போது மனிதர்களை காகங்கள் கொத்தக்கூடும்.
இந்நிலையில் சுற்றுப்புறத்தில் உள்ள காகங்களின் கூடுகளை அகற்றுவதற்கோ அல்லது காகங்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கோ பொதுமக்கள் 1800-476-1600 என்ற எண்ணில் விலங்கு மற்றும் கால்நடை மருத்துவச் சேவையுடன் தொடர்புகொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

