சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைந்த நால்வருக்குச் சிறை

1 mins read
5e2b327a-076b-4779-8a26-348ccc5d9f0e
கைது செய்யப்படும்போது அந்த ஆடவர்களிடம் இருந்த வரி செலுத்தப்படாத 260 சிகரெட் பெட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.  - படம்: சிங்கப்பூர் காவல்படை

சிங்கப்பூருக்குள் படகுமூலம் சட்டவிரோதமாக நுழைந்த நான்கு இந்தோனீசியர்களுக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தண்டனை விதிக்கப்பட்ட மூவர் ஏற்கெனவே சிங்கப்பூரில் குடிநுழைவு குற்றங்களில் ஈடுபட்டவர்கள். வேலைவாய்ப்புக்காக அவர்கள் மீண்டும் சிங்கப்பூருக்குள் நுழைய முயன்றபோது அதிகாரிகளிடம் பிடிபட்டனர்.

கடந்த மே மாதம் இந்த நான்கு ஆடவர்களும் புலாவ் தெக்கோங் அருகே சிங்கப்பூர் கடலோரக் காவற்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டபோது அந்த ஆடவர்களிடம் இருந்த வரி செலுத்தப்படாத 260 சிகரெட் பெட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

ரிப்பன், 28, மகயுதீன், 32, ரித்வான் அகரின், 50, ஆஸ்மின் அலெக்ஸ்சாண்டர், 50, ஆகியோருக்குச் செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) தண்டனை விதிக்கப்பட்டது.

ரிப்பனுக்கு 15 மாதச் சிறைத்தண்டனையும் ஆறு பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.

ரித்வானுக்கு ஓராண்டு மற்றும் ஒன்பது மாதச் சிறைத்தண்டனையும் 6,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது.

மகந்தீனுக்கு ஓராண்டு மற்றும் எட்டு மாதச் சிறைத்தண்டனையும் ஆறு பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.

அஸ்மினுக்கு 13 மாதச் சிறைத்தண்டனையும் 2,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது.

ரிப்பன், மகயுதீன், ரித்வான் ஆகிய மூவரும் 2021ஆம் ஆண்டுக்கும் 2024ஆம் ஆண்டுக்கும் இடையில் குடிநுழைவு குற்றங்களில் ஈடுபட்டதால் தண்டிக்கப்பட்டனர். அதன் பின்னர் அவர்கள் நாடு கடத்தப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்