வீட்டுக் கடன் மோசடி மூலம் $5.1 மில்லியனுக்கும் மேற்பட்ட தொகையை மே பேங்க் வங்கி வழங்குவதற்குக் கூட்டுச் சதியில் ஈடுபட்ட ஆடவர்களுக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
முகமது ஹாரோன் ஹசான், சுபாண்டி அகமது, கொக் சியூ லியோங், பிஜாபகதூர் ராய் ஸ்ரீ கந்த்ராய், ஜுமாட் ஜொஹாரி ஆகியோர் அவர்கள்.
இயோ சூ காங் ரோட்டுக்கு அருகில் உள்ள சராக்கா டவர்சில் உள்ள ஒரு வீடு, உட்லண்ட்ஸ் ஸ்திரீட் 41க்கு அருகில் உள்ள உட்குரோவ் வாக்கில் உள்ள ஒரு வீடு என இரண்டு வீடுகளின் தொடர்பில் இவ்வாறு அவர்கள் மோசடி செய்தனர்.
அவ்விரண்டு வீடுகளை விற்றவர்கள் $764,000 ரொக்கத்தைத் திருப்பித் தந்ததாக அரசாங்கத் தரப்பு கூறியது.
குற்றவாளிகளில் ஒருவரான பிஜாபகதூர் ராய் ஸ்ரீ கந்த்ராய், அந்தத் தொகையைச் சதித் திட்டத்தில் உடந்தையாக இருந்தவர்களுடன் பின்னர் பகிர்ந்துகொண்டதாக நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன.
சராக்கா டவர்சில் உள்ள வீட்டின் உரிமையாளர் $300,000 கொடுத்ததாகவும் அது தொடர்பான சதியில் சுபாண்டி அகமது, கொக் சியூ லியோங், ராய் மூவரும் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டது.
மேலும், அந்த வீட்டுக்காக மே பேங்க் வங்கியில் $2.32 மில்லியன் கடன் பெறுவதற்கான சதித் திட்டத்திலும் அவர்கள் ஈடுபட்டனர். போலியான ஆவணங்களை அவர்கள் சமர்ப்பித்ததாகக் கூறப்பட்டது.
உட்குரோவ் வாக் வீட்டுக்கு $464,000 தொகை திருப்பித் தரப்பட்டதாகவும் அது தொடர்பான சதியில் சுபாண்டி, ராய், முகமது ஹாரோன் ஹசான், ஜுமாட் ஜொஹாரி ஆகியோர் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
அந்த வீட்டுக்காக மே பேங்க் வங்கியிலிருந்து $2.8 மில்லியன் கடன் பெற சுபாண்டியும் ராயும் சதியில் ஈடுபட்டனர்.
ஆகஸ்ட் 20ஆம் தேதி, சுபாண்டிக்கு ஆறரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
ராய்க்கு ஏழரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொக், நாலரை ஆண்டுகள் சிறைத்தண்டனையை எதிர்கொள்கிறார்.
ஹாரோன், ஜுமாட் இருவருக்கும் பத்து வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஐந்து ஆடவர்கள் மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் அவர்கள் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.