ஆர்ச்சர்ட் டவர்ஸ் கடைத்தொகுதிக்கு அருகில் 2022ஆம் ஆண்டு நடந்த சண்டையில் ஈடுபட்டதற்காக ஆறாவது நபருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அந்தச் சண்டை காரணமாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.
2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 5 மணிவாக்கில் நடந்த சம்பவத்தைக் காட்டும் காணொளிகள் பின்னர் இணையத்தில் பரவிவந்தன.
சம்பவம் நடந்த காலத்தில் ரகசியக் கும்பல் ஒன்றின் மூத்த உறுப்பினராக இருந்த 31 வயது முகம்மது ஃபாஇஸ் ஜுனைடிக்கு 15 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கலகத்தில் ஈடுபட்டதாகவும் சட்டவிரோதக் கும்பல் உறுப்பினராகச் செயல்பட்டதாகவும் தம்மீது சுமத்தப்பட்டக் குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார்.
அதோடு, மின்சிகரெட் தொடர்பான ஐந்து குற்றச்சாட்டுகளுக்கு அவருக்கு $10,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
அபராதத்தைச் செலுத்தத் தவறினால், ஃபாஇஸ் கூடுதலாக இருபது நாள்கள் சிறையில் இருக்கவேண்டும்.
சக கும்பல் உறுப்பினர்களான மற்ற ஐவருக்கு ஆகஸ்ட் 7ஆம் தேதி நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
நொரஸ்ருல் முகம்மது நூர், 25, முகம்மது இக்ஸுவான் ரம்லி, 27, முகம்மது யுஸ்ரி ரம்லீ, 28, அப்துல் ஹகிம் ஜமில், 32, முகம்மது ஃபட்ஸ்லி ஜுனைடி, 36, ஆகியோரே அவர்கள்.
அந்த ஆறு ஆடவர்கள் உள்ளிட்ட கும்பல் உறுப்பினர்கள், 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி ‘சொய் ஹாப்பி’ எனும் ஆர்ச்சர்ட் டவர்ஸ் மதுபானக் கூடத்தில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அவர்களில் சிலர் புகைப்பிடிப்பதற்காக மதுபானக் கூடத்திற்கு வெளியே சென்றனர். ஃபாஇஸ், திரு மிஸ்ரா அப்துல் அஸ்மான் என்ற ஆடவரிடம் பேசிக்கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. திரு மிஸ்ரா தகாத சொல்லைப் பயன்படுத்தியதால் ரகசியக் கும்பல் உறுப்பினர்கள் அவரைத் தாக்கினர்.
இவற்றைக் கண்ட மற்றொரு நபரான திரு அப்துல் ஃபிகோ அப்துல் ஹலீம் சண்டையில் சேர்ந்துகொண்டார்.
குறைந்தது 10 பேர் அடங்கிய கும்பல் அவ்விருவரையும் தாக்கினர்.
அவர்கள் இருவருக்கும் முகங்களில் காயம் ஏற்பட்டன. அவர்கள் வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஃபாஇஸ், 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி கைதுசெய்யப்பட்டார்.

