அங் மோ கியோ பிரிவுக் காவல்துறைத் தலைமையகக் கழிவறையைச் சேதப்படுத்தியவருக்கு சிறை, பிரம்படி

அங் மோ கியோ பிரிவுக் காவல்துறைத் தலைமையகக் கழிவறையைச் சேதப்படுத்தியவருக்கு சிறை, பிரம்படி

படம்: பிக்சாபே

28 Oct 2026 - 7:50 pm

2 mins read

அங் மோ கியோ காவல்துறைப் பிரிவுத் தலைமையகத்தில் உள்ள கழிவறையைச் சேதப்படுத்திய குற்றத்திற்காக, 24 வயது அமிர்குல் ஹக்கிம் முகம்மது ஃபடிலுக்கு செவ்வாய்க்கிழமையன்று (அக்டோபர் 27) ஆறு மாதச் சிறைத் தண்டனையும் மூன்று பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.

அத்துடன் அவருக்கு $1,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

பொதுச்சொத்தை நாசப்படுத்தியது, பின்னர் தமது வங்கிக் கணக்கை விற்று குற்றச்செயலுக்குப் பயன்படுத்த அனுமதித்தது ஆகிய குற்றச்சாட்டுகளை அவர் செப்டம்பர் மாதத்தில் ஒப்புக்கொண்டார்.

வங்கிக் கணக்கு தொடர்பான விவரங்களை வேறொருவருக்குக் கொடுத்தது, ஆபாசப் படங்களை வைத்திருந்தது ஆகிய மற்ற இரு குற்றச்சாட்டுகளும் தண்டனை விதிப்பின்போது கருத்தில் கொள்ளப்பட்டன.

நீதிமன்ற ஆவணங்களின்படி, 2025ஆம் தேதி மே மாதத்தில் அடையாளம் தெரியாத ஒரு நபரிடம் அமிர்குல் தமது வங்கிக் கணக்கைப் பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளார்.

அதன் பின்னர் அந்தக் கணக்கு குற்றச்செயல் மூலம் கிடைத்த பலன்களைச் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் செய்யப் பயன்படுத்தப்பட்டது. இதற்காக அவருக்கு $1,000 பணம் கொடுக்கப்பட்டது.

அதே ஆண்டு மே 7ஆம் தேதியன்று, ஆங் மோ கியோ காவல்துறைப் பிரிவுத் தலைமையகத்தில் உள்ள கழிவறையில் இருந்தபோது, அழிக்க முடியாத சிவப்பு வண்ண எழுதுகோலால் அங்கிருந்த கழிவறைத் தடுப்புச் சுவரை அவர் நாசப்படுத்தினார். சுவருக்கு நிரந்தரச் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், சிங்கப்பூர் காவல்துறைக்கு எதிரான இழிவுபடுத்தும் சொற்களை அமிர்குல் சுவரில் எழுதியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. அந்தச் சொற்களில் காவல்துறைக்கு எதிரான முழக்கவரியும் அவதூறு வார்த்தைகளும் அடங்கியிருந்தன.

குறிப்புச் சொற்கள்