சிறார் பாலியல் காணொளிகள் வைத்திருந்தவருக்குச் சிறை, பிரம்படி

2 mins read
298bebf5-e536-4b48-863c-751d0fb853db
மாதிரிப்படம்: - பிக்சாபே

சிறார் இடம்பெற்ற பாலியல் காணொளிகளை இணையத்தில் தேடிய ஆடவர் ஒருவர், பின்னர் அத்தகைய 304 காணொளிகளை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

முகம்மது ஃபத்லி கமாரல் ஜமான், 36, என்ற திருமணமான அந்த ஆடவர், சிறார் பாலியல் காணொளிகள் வைத்திருந்ததாகத் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை திங்கட்கிழமையன்று (நவம்பர் 4) நீதிமன்றத்தில் ஒத்துக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, அவருக்கு ஈராண்டு, ஒரு மாதச் சிறைவாசமும் நான்கு பிரம்படிகளும் தண்டனையாக விதிக்கப்பட்டன.

ஜமான் கடந்த 2022ஆம் ஆண்டு பாலியல் இணையத்தளங்களில் உலவியபோது, சிறார் ஒருவர், பெரியவர் ஒருவருடன் பாலியல் செய்கையில் ஈடுபட்ட காணொளியைக் கண்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. பின்னர், கோப்புப் பகிர்வு மென்பொருளைப் பயன்படுத்தி, அத்தகைய காணொளிகளை அவர் பதிவிறக்கம் செய்ததாகக் கூறப்பட்டது.

அவரது குற்றச்செயல் தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில், குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கடந்த 2023 பிப்ரவரி 20ஆம் தேதி ஜமானின் வீட்டைச் சோதனையிட்டனர்.

அப்போது ஜமான் தமது வீட்டில் இல்லை. சற்று நேரத்தில் வீட்டிற்கு வந்த அவரிடம் காவல்துறையினர் விசாரித்தபோது, சிறார் பாலியல் காணொளிகளைப் பதிவிறக்கம் செய்ததை ஒப்புக்கொண்டார்.

பின்னர் அவரது கணினியிலும் வன்வட்டிலும் 304 சிறார் பாலியல் காணொளிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த 2020ஆம் ஆண்டிலிருந்து, சிறார் பாலியல் படங்கள், காணொளிகள் சார்ந்த கிட்டத்தட்ட 140 விசாரணைகளைக் காவல்துறையினர் மேற்கொண்டதாக இவ்வாண்டு செப்டம்பர் மாதம் உள்துறை துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் தெரிவித்திருந்தார்.

சிறார் பாலியல் படங்கள், காணொளிகளை வைத்திருப்பது குற்றம் என்ற சட்டம் கடந்த 2020 ஜனவரி முதல் நடப்பிற்கு வந்தது. அத்தகைய குற்றமிழைத்தது உறுதிப்படுத்தப்பட்டால், குற்றவாளிக்கு ஐந்தாண்டுவரை சிறையும் அபராதம் அல்லது பிரம்படியும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்