2023 ஜனவரியில், ஈசூனில் கத்தி முனையில் மாது ஒருவரைப் பிணை பிடித்து வைத்திருந்த, மீண்டும் மீண்டும் குற்றம் செய்த ஆடவர் ஒருவருக்கு ஜூலை 30ஆம் தேதி எட்டு ஆண்டுகள், ஒரு மாதம் சிறையும் ஆறு பிரம்படிகளும் தண்டனையாக விதிக்கப்பட்டது.
முகம்மது ஃபைசல் முகம்மது அரிஃப் எனும் அந்த 43 வயது ஆடவர், தம் மீது சுமத்தப்பட்ட போதைப் பொருள் உட்கொண்டது, தொல்லை கொடுத்தது, கடத்தியது, காவல்துறை அதிகாரியைத் தாக்கியது ஆகிய குற்றச்சாட்டுகளை மே 28ஆம் தேதி ஒப்புக்கொண்டார்.
2014ஆம் ஆண்டில் மார்ஃபின் போதைப் பொருள் உட்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டதைத் தொடர்ந்து, ஃபைசலுக்கு ஐந்து ஆண்டுகள், ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது என்று முன்னதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் டெலிஷியா டான் தெரிவித்தார்.
அத்தண்டனையிலிருந்து விடுதலையானவுடன் ஃபைசல், 2022 ஜூனில் மீண்டும் போதைப் பொருள் உட்கொண்டார்.
ஜனவரி 9, 2023 அன்று காலையில், ஃபைசல் போதைப்பொருள் உட்கொண்ட பிறகு, கையில் கத்தியை வைத்துக்கொண்டு ஈசூனைச் சுற்றி நடந்தார். அதைப் பார்த்த பொதுமக்களில் ஒருவர் காவல்துறைக்குத் தகவல் கொடுக்கவே, அவர்கள் சம்பவ இடத்துக்குக் காலை 7.45 மணிக்கு வந்து சேர்ந்தனர்.
அந்தச் சமயத்தில் ஈசூன் ரிங் ரோடு, புளோக் 108க்குக் கீழ் உள்ள வெற்றுத் தளத்தில் 60 வயது மாது ஒருவர் தனது உறவினருக்காகக் காத்திருந்தபோது, ஃபைசலைக் கண்டார். அப்போது அவர் அங்கிருந்து எழுந்து, அருகில் உள்ள காப்பிக் கடையை நோக்கு நடந்தார்.
இதற்கிடையே, காவல்துறையினர் தன்னைத்தான் தேடிக்கொண்டிருக்கின்றனர் என்பதை உணர்ந்த ஃபைசல், அவர்களிடமிருந்து தப்பிக்க, அருகில் நடைபாதையில் சென்றுக்கொண்டிருந்த மாதைப் பிணையாகப் பயன்படுத்த முடிவெடுத்தார்.
“மாதின் பின்னாலிருந்து சென்ற ஃபைசல், மாதின் கழுத்தில் தனது கையைக் கொண்டு இறுக்கி, கத்தியை அவரது கழுத்துக்கு அருகே வைத்து மிரட்டினார்,” என்று வழக்கறிஞர் டான் விவரித்தார்.
தொடர்புடைய செய்திகள்
காவல்துறையினர் அவரை சமாதானப்படுத்தி மாதை விடுவிக்க முயன்றனர். ஆனால் அவர் மறுத்துவிட்டார்.
கூடுதல் அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் உள்ளே நுழைந்து, ஆயுதத்தைக் கைப்பற்றி, காலை 8.10 மணிக்கு முன்னதாக ஈசூன் ரிங் ரோடு, புளோக் 110ல் உள்ள ஒரு காப்பிக் கடைக்கு அருகே ஃபைசலை கைது செய்தனர்.
தனக்கு நெஞ்சு வலிக்கிறது என்று கூறிய ஃபைசல், சாங்கி பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் சிறுநீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அவரது சிறுநீரில் மெத்தம்ஃபெட்டமின் போதைப் பொருள் தடயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

