பொறுப்பற்ற வகையில் நடந்துகொண்டு சக ஊழியரின் மரணத்துக்குக் காரணமாக இருந்த ஆடவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
லாரியில் பொருத்தப்பட்டுள்ள பாரந்தூக்கியை இயக்கும் பணியைப் புரிந்த இங் லியாட் கியோங்கிற்கு 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஓராண்டு, இரண்டு வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்தத் தகவலை மனிதவள அமைச்சு மே 13ல் வெளியிட்டது.
மேற்பார்வையாளர் வேண்டாம் என்று கூறியும், ஒழுங்காகக் கட்டப்படாத 4.4 டன் எடை கொண்ட விளக்குக் கம்பத்தை இங் பாரந்தூக்கியைக் கொண்டு தூக்கினார்.
அருகில் யாராவது இருக்கிறார்களா என உறுதிப்படுத்தாமல் அவர் அவ்வாறு செய்தார்.
அந்த விளக்குக் கம்பம் 32 வயது ஊழியர்மீது விழுந்தது. அந்த ஊழியர் சம்பவ இடத்திலேயே மாண்டார்.
மற்றொரு சம்பவத்தில், துவாஸ் வட்டாரத்தில் உள்ள தொழிற்சாலையில் பணிபுரிந்துகொண்டிருந்த 48 வயது ஊழியர் ஒருவர் உயரத்திலிருந்து விழுந்து மாண்டார். கீழே இருந்த இயந்திரம் மீது விழுந்து அவர் உயிரிழந்தார்.
அந்தப் பணிகளை ஏற்று நடத்திய ஒப்பந்ததாரரான வீனா ஸ்பெஷலிஸ்ட் நிறுவனம், பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக நடைமுறைப்படுத்தவில்லை என்று விசாரணையில் தெரியவந்ததாக மனிதவள அமைச்சு கூறியது.
தொடர்புடைய செய்திகள்
அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான ரோய் லோ நியாப் மெங்கிற்கு கடந்த மார்ச் மாதம் $260,000 அபராதம் விதிக்கப்பட்டது.
இங், லோ இருவருக்கும் வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரச் சட்டத்தின்கீழ் தண்டனை விதிக்கப்பட்டது.
வேலையிட மரணங்களைப் பொறுத்தவரை கட்டுமானத் தளங்களில்தான் அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதாக அமைச்சு கூறியது.
2024ஆம் ஆண்டில், கட்டுமானத் தளங்களில் 20 உயிரிழப்புகள் ஏற்பட்டன. 2023ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 18ஆக இருந்தது.