சிங்கப்பூரில் அனுமதிக்கப்பட்ட காலத்தையும் தாண்டி 8,081 நாள்கள், அதாவது 22 ஆண்டுகளுக்கும் மேலாகச் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த சீனாவைச் சேர்ந்த 57 வயது மாதிற்கு ஆறு மாதச் சிறைத்தண்டனையும் 2,500 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டன.
குடிநுழைவுச் சட்டத்தின்கீழ் சுமத்தப்பட்ட ஒரு குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட வாங் யுயிங் என்ற அவருக்கு, ஆகஸ்ட் 21ஆம் தேதி தண்டனை விதிக்கப்பட்டது.
வாங், ஆகஸ்ட் 4ஆம் தேதி புக்கிட் மேரா கிழக்கு அக்கம்பக்க காவல் நிலையத்தில் சரணடைந்ததாக ‘ஷின் மின் டெய்லி நியூஸ்’ செய்தி வெளியிட்டது.
சிங்கப்பூரில் சட்டபூர்வமாகத் தங்கியிருந்ததற்கான எந்தவோர் ஆவணத்தையும் அவரால் சமர்ப்பிக்க முடியவில்லை.
அதனைத் தொடர்ந்து வாங் கைது செய்யப்பட்டு, விசாரணைக்காகக் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.
முன்னதாக, 2002ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி, அனுமதிக்கப்பட்ட காலத்தைத் தாண்டி, வாங் சிங்கப்பூரில் 90 நாள்களுக்கும் மேலாகத் தங்கியிருந்ததற்காகத் தண்டனை பெற்றிருந்தார் என்பது விசாரணையில் தெரியவந்தது.
அப்போது, அவருக்கு ஒரு மாதச் சிறைத் தண்டனையும் 2,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு, டிசம்பர் 31ஆம் தேதி விடுவிக்கப்பட்ட வாங், சில நாள்களுக்குப் பிறகு சீனாவுக்கு நாடுகடத்தப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, 2004ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி வாங் விமானம் மூலம் மீண்டும் சிங்கப்பூருக்குள் நுழைந்தார்.
அன்றைய தினமே அவருக்கு 14 நாள்கள் தங்குவதற்கான அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டதாக ‘மதர்ஷிப்’ ஊடகம் குற்றப்பத்திரிகையிலிருந்து அறிந்தது. அனுமதிச் சீட்டின் காலக்கெடு முடிந்த பிறகும், அவர் சிங்கப்பூரை விட்டு வெளியேறவில்லை என்றும் இங்குத் தங்குவதற்கான காலத்தை நீட்டிப்பதற்கு விண்ணப்பிக்கத் தவறினார் என்றும் தெரிவிக்கப்பட்டது.


