நீதிபதியிடம் பொய்யுரைத்த சிஎன்பி அதிகாரிக்குச் சிறை

1 mins read
b3776807-dd56-46ed-924d-ae61806d1371
36 வயது முகம்மது ஹைக்கல் ரஹ்மானுக்கு 18 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. - படம்: இணையம்

தமது சக ஊழியர் தொடர்பான வழக்கில் நீதிபதியிடம் பொய்யுரைத்த குற்றத்துக்காக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரியான 36 வயது முகம்மது ஹைக்கல் ரஹ்மானுக்கு 18 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

சிவபாலன் கன்னியப்பனைத் தமது சக ஊழியரான வெங்கடேஷ் ராஜ் நைனார் நாகராஜன் அடிப்பதைத் தாம் பார்க்கவில்லை என்று 2021ஆம் ஆண்டில் நடைபெற்ற வழக்கில் ஹைக்கல் தெரிவித்தார்.

ஆனால் வெங்டடேஷ் தம்மை அடித்துத் துன்புறுத்துவதை நிறுத்த உதவுமாறு மலேசியரான சிவபாலன் மன்றாடியபோது ஹைக்கல் உதவி செய்ய மறுத்துவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

2018ஆம் ஆண்டில் வழக்கை விசாரித்த காவல்துறை அதிகாரியிடம் ஹைக்கல் பொய்த் தகவல் அளித்ததாக அவர்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தீர்ப்பளிக்கும்போது கருத்தில் கொள்ளப்பட்டது.

வெங்கடேஷ் செய்த தவற்றை மூடி மறைக்க ஹைக்கல் அவ்வாறு செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

ஹைக்கலின் பொய் சாட்சியத்தைக் கேட்டு நீதிபதி வெங்டடேஷை விடுவித்திருக்கக்கூடும் என்று அரசு வழக்கறிஞர் கூறினார்.

2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெங்கடேஷுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் புரிந்ததற்காக சிவபாலனுக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 13 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்