மாது ஒருவர் தம் முன்னாள் காதலர் பணம் அனுப்புமாறு தொந்தரவு கொடுத்ததாகக் காவல்துறை அதிகாரியிடம் கூறியிருக்கிறார்.
அந்தக் காவல்துறை அதிகதாரி, பணத்தைத் தனக்கு அனுப்புமாறு மாதிடம் கேட்டுக்கொண்டார். அது, காவல்துறை நடைமுறை என்று 44 வயது சான் ஸியாவ், மாதிடம் கூறினார்.
அந்த 4,000 வெள்ளியை முன்னாள் காதலரிடம் தான் அனுப்பப்போவதாகவும் சான் கூறியிருந்தார். ஆனால், அவர் அந்தப் பணத்தைத் தானே வைத்துக்கொண்டு இரண்டு நாள்களில் கிட்டத்தட்ட மொத்தமாகச் செலவழித்தார்.
திங்கட்கிழமையன்று (ஏப்ரல் 14) சானுக்கு 16 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்ப்டடது. நம்பிக்கை துரோகம் இழைத்ததாக ஒரு குற்றச்சாட்டையும் ரகசியக் காப்புச் சட்டத்தின்கீழ் ஒரு குற்றச்சாட்டையும் அவர் ஒப்புக்கொண்டார். வேலையிடக் கணினி அமைப்பைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக அவர்மீது ரகசியக் காப்புச் சட்டத்தின்கீழ் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
குற்றம் புரிந்தபோது சான் சிங்கப்பூர் காவற்துறையில் கண்காணிப்பாளர் பதவி வகித்ததாகவும் மூத்த விசாரணை அதிகாரியாக இருந்ததாகவும் துணை அரசாங்க வழக்கறிஞர் சியா வென்ஜியே தெரிவித்தார்.
நீதிமன்றத்தில் பெயர் குறிப்பிடப்படாத மாது, முன்னாள் காதலர் தன்னை மானபங்கப்படுத்தியதாக 2022ஆம் ஆண்டு காவல்துறையிடம் புகார் கொடுத்தார். அந்தப் புகாருக்குச் சான், விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
விசாரணையின்போது சான், மாதின் பணத்தைக் களவாடியதாகத் தெரிவிக்கப்பட்டது.

