பொதுப் போக்குவரத்துப் பயணத்தின்போது 15 மற்றும் 18 வயதுடைய சிறுவர்களை மானபங்கம் செய்த குற்றத்திற்காக 72 வயது முதியவருக்கு மூன்று வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
அம்புரோஸ் லீ எனப்படும் அவர், ஒரு மானபங்கக் குற்றச்சாட்டு, மானத்தைக் கெடுக்கும் வகையில் தகாத வகையில் பேசிய ஒரு குற்றச்சாட்டு ஆகியவற்றை ஒப்புக்கொண்டார். இதர இரு குற்றச்சாட்டுகள் தண்டனை விதிப்பின்போது கவனத்தில் கொள்ளப்பட்டன.
பாதிக்கப்பட்ட இரு சிறுவர்களின் அடையாளத்தைக் காக்கும் பொருட்டு அவர்களைப் பற்றிய விவரங்களை வெளியிட அனுமதி இல்லை.
பாதிக்கப்பட்ட 18 வயது மாணவர், 2023 மே 17ஆம் தேதி பள்ளிக்குச் செல்ல பேருந்தில் அமர்ந்திருந்தபோது லீ அவரை அணுகி பேச்சுக் கொடுத்தார். பின்னர் அந்த மாணவரின் தொடையை இருமுறை பிடித்துவிட்டார். அங்கிருந்து நகர்ந்து சென்ற மாணவர் அதுகுறித்து காவல்துறையில் புகார் செய்தார். முதியவர் மானபங்கம் செய்தது பேருந்தில் இருந்த கண்காணிப்புப் படக்கருவியில் பதிவானது. அது நீதிமன்றத்தில் போட்டுக் காட்டப்பட்டது.
இரு நாள் கழித்து மே 20ஆம் தேதி எம்ஆர்டி ரயிலில் பயணம் செய்த 15 வயது சிறுவனின் தொடையை லீ தமது விரலால் தடவினார். வயதுக்கு வந்துவிட்டாயா என்று அச்சிறுவனிடம் அவர் கேட்டார்.
குற்றப் பின்னணி இல்லாததாலும் வயது கருதியும் லீக்கு மூன்று வார சிறைத் தண்டனை விதிப்பதாக செவ்வாய்க்கிழமை (ஜனவரி 21) தமது தீர்ப்பில் நீதிபதி கூறினார்.

