சிங்கப்பூரில் கையூட்டு வாங்கியதை அடுத்து நாட்டைவிட்டு 17 ஆண்டுகளுக்கு முன் தப்பியோடிய முன்னாள் காவல்துறை அதிகாரிக்கு ஒன்பது ஆண்டு சிறைத் தண்டனை திங்கட்கிழமை (மே 26) விதிக்கப்பட்டது. தலைமறைவாக இருந்த ஆடவர் சீனாவில் பிடிபட்டார்.
மார்க் கோ என்றும் அழைக்கப்படும் கோ கியென் தியோங்கிற்குச் சிறைத் தண்டனையுடன் $1,000யும் $47,000யும் அபராதமாக விதிக்கப்பட்டது.
52 வயது கோ, சிங்கப்பூர்க் காவல்துறையில் உதவி கண்காணிப்பாளராக இருந்தபோது சட்டவிரோதமாக சூதாட்டக் கூடத்தை நடத்திய ஆடவரிடமிருந்து 2006ஆம் ஆண்டிலிருந்து 2007ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் கையூட்டு வாங்கினார்.
பிடிபடுவதற்கு முன் சீனாவுக்குச் சென்ற கோ அங்கேயும் சில குற்றச்செயல்களைப் புரிந்ததை அடுத்து சிங்கப்பூருக்குத் திருப்பி அனுப்பப்பட்டார். ஊழல் ஒழிப்புச் சட்டத்தின் கீழ் 15 குற்றச்சாட்டுகளைச் சிங்கப்பூரரான கோ ஒப்புக்கொண்டார்.
1998ஆம் ஆண்டு சிங்கப்பூர்க் காவல்துறையில் சேர்ந்த கோ, குற்றவியல் விசாரணைப் பிரிவின்கீழ் உள்ள சட்டவிரோதமாக கடன்கொடுப்பதற்கு எதிரான பணிக்குழுவில் அதிகாரியாக இருந்தார்.
2005ஆம் ஆண்டு அவருக்கு ‘ஆ ஹோ’ என்று அழைக்கப்படும் சுவா சின் ஹோ என்ற ஆடவரின் அறிமுகம் கிடைத்தது. சிங்கப்பூரில் பல சட்டவிரோத சூதாட்ட நிலையங்களை ஹோ நடத்திவந்தார்.
திருமண முறிவு வழக்கால் ஏற்பட்ட நிதி நெருக்கடிகளையும் கடன்பற்று அட்டைக் கட்டணங்களையும் எதிர்கொண்ட கோ, சுவாவிடம் பணம் கேட்கும்படி சக அதிகாரியிடம் கேட்டார். மூத்த காவல்துறை அதிகாரியான கோவை வசப்படுத்தும் நோக்கில் சுவா பணம் தர சம்மதித்தார்.
2006ஆம் ஆண்டிலிருந்து சுவா பலமுறை கோவுக்குப் பணம் கொடுத்தார். வெளிநாட்டுப் பயணக் கட்டணம், ஹோட்டல் செலவு, மதுபானங்களுக்கான செலவு என கோவிற்காக சுவா பணம் கட்டியுள்ளார். மொத்தத்தில் கோவுக்குச் சுவா $47,700 செலவு செய்தார். அதற்குப் பதிலாக காவல்துறையினர் சோதனையிடக்கூடிய சூதாட்ட நிலையங்கள் பற்றி கோ, சுவாவுக்குத் தகவல் அளிப்பதையும் வாடிக்கையாகக் கொண்டிருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
2007 ஜூலை மாதம் சீனாவுக்குச் சென்ற கோ, தம்மீது விசாரணை நடைபெறுவதை அறிந்து அங்கேயே தங்கிவிட்டார். 2019ஆம் ஆண்டு சீனாவில் கோ கைதுசெய்யப்பட்டார்.