சலிப்பாக உணரும்போதெல்லாம் இப் ஹின் யூ, 46, தனது அறையிலிருந்து உலோகக் குண்டுகளை கவண்வில் (slingshot) மற்றும் பிற பொருள்களைப் பயன்படுத்தி விளக்குக் கம்பங்கள், அறிவிப்புப் பலகைகளைக் குறிவைத்து அடிப்பார்.
ஒரு சமயம், குப்பை லாரியை மறித்தபடி அருகில் நிறுத்தப்பட்டிருந்த காரை நோக்கி அடிக்க முயன்றார்.
2023 பிப்ரவரிக்கும் ஏப்ரலுக்கும் இடையே அவர் தனது புக்கிட் பாஞ்சாங் வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) குடியிருப்பிலிருந்து உலோகக் குண்டுகளை கவண் கொண்டு அடித்துள்ளார். இரண்டு சந்தர்ப்பங்களில் அண்டை வீட்டுக்காரரின் சன்னல்களைச் சேதப்படுத்தினார்.
அவர் தனது அண்டை வீட்டுக்காரருக்கு $550 முழு இழப்பீடு வழங்கினார்.
அவருக்கு புதன்கிழமை (ஏப்ரல் 23) 12 வாரச் சிறைத் தண்டனையும் $4,000 அபராதமும் விதிக்கப்பட்டன.
மற்றவர்களின் பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் செயலில் ஈடுபட்டது, ஸ்பிரிங் விசையில் இயங்கும் கைத்துப்பாக்கிகள், தண்ணீரை உறிஞ்சும் உருண்டைகளைப் பாய்ச்சும் பொம்மைத் துப்பாக்கியை வைத்திருந்தது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார்.
2023 மே மாதம் அவரது வீட்டைச் சோதனையிட்ட காவல்துறை அதிகாரிகள் ஏழு கவண்கள், மூன்று ஸ்பிரிங்க்- விசையில் இயங்கும் கைத்துப்பாக்கிகள், பேட்டரியில் இயங்கும் பொம்மைத் துப்பாக்கி ஒன்று ஆகியவற்றைக் கண்டுபிடித்தனர்.
தற்செயலாக உலோகப் பந்து எவரையாவது தாக்கியிருந்தால் பாதிப்பு அதிகமாக இருந்திருக்கும் என்று அரசாங்க வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“எனினும், குற்றம் சாட்டப்பட்டவர் கவண்களைத் தீய நோக்கங்களுக்காகப் பயன்படுத்த எண்ணியதாகத் தெரியவில்லை,” என்றார் அவர்.
பொது ஒழுங்கு, பாதுகாப்பு காரணமாக இந்த வழக்கில் தண்டனை அவசியம் என்றும் வழக்கறிஞர் வலியுறுத்தினார்.

