தனக்குக்கீழ் பணிபுரிந்த இரு முழுநேர தேசிய சேவையாளர்களை, மேற்பார்வையாளர் என்ற பொறுப்பில் இருந்த ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ராமா ஷங்கர் சிங் மானபங்கப்படுத்தியதற்காக அவருக்கு ஜூன் 12ஆம் தேதி 24 நாள்கள் சிறைத் தண்டனையும் $20,000 அபராதமும் விதிக்கப்பட்டன.
தனது அதிகாரத்தை 60 வயது சிங் தவறாகப் பயன்படுத்தியதாக தண்டனை விதிப்புக்குமுன் மாவட்ட நீதிபதி குறிப்பிட்டார்.
சிங் 2016ஆம் ஆண்டு ஓய்வுபெறுவதற்குமுன் ‘சூப்ரின்டெண்டன்ட்’ பதவியில் இருந்தார் என்றும் ஜூன் 10ஆம் தேதி அவர் தன் மீது சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார் என்றும் அறியப்படுகிறது.
அவரின் கைப்பேசியிலும் இரண்டு மடிக்கணினிகளிலும் மொத்தம் 170 ஆபாசக் காணொளிகளை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதன் தொடர்பான குற்றச்சாட்டும் சிங் மீது சுமத்தப்பட்டது.
விசாரணை ஆவணங்களை எடுப்பதற்காக சந்திப்பு அறைக்குச் செல்ல வேண்டும் என்று முழுநேர தேசிய சேவையாளர் ‘வி1’ என்பவருக்கு உத்தரவிடப்பட்டது.
அங் மோ கியோ பிரிவு தலைமையகத்தில் 2003ஆம் ஆண்டு நடந்த மானபங்கச் சம்பவத்தின்போது நாற்காலியில் அமர்ந்திருந்த அந்த இளம் அதிகாரியை நோக்கி சிங் சென்றதாகவும் இளையருக்குப் பின்னால் நின்றதாகவும் நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தன.
‘வி1’ தோள்பட்டைகளைப் பிடித்துவிட்ட சிங், தனக்கு வி1 மீது ஈர்ப்பு இருப்பதாகக் கூறியிருந்தார். பின்னர், ‘வி1’ உச்சந்தலையை முத்தமும் இட்டுள்ளார் சிங்.
பின்னர், இளம் அதிகாரியின் அந்தரங்கப் பகுதிகளை சிங் தொட்டதாகவும் அதனால் அதிர்ச்சியடைந்த இளையர் அறையைவிட்டு வெளியேறியதாகவும் கூறப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
பாதிக்கப்பட்ட அந்த இளையருக்குத் தற்போது 42 வயது.
பாதிக்கப்பட்ட மற்றோர் அதிகாரியின் வயது 38.
இவர் 2005ஆம் ஆண்டுக்கும் 2006ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் சிங்குடன் காவல்துறை காரில் இருந்தபோது, சிங் இரண்டு முறை மானபங்கப்படுத்தினார்.

