பாலர்பள்ளி முன்னாள் ஆசிரியருக்குச் சிறை

பாலர்பள்ளி முன்னாள் ஆசிரியருக்குச் சிறை

1 mins read
2909ca15-2a5a-4325-81d9-68f15d1cfa13
குற்றவாளி 2022ஆம் ஆண்டுமுதல் 2024ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதிவரை கைக்குழந்தைகளைக் கவனிக்கும் ஆசிரியராகப் பணியாற்றினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பாலர்பள்ளி ஒன்றில் கைக்குழந்தைகளைக் கவனித்துவந்த ஆசிரியர் ஒருவருக்கு, குழந்தைகளைத் துன்புறுத்தியதால், ஓராண்டு இரண்டு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் ஒரு வயதுச் சிறுமிக்குப் புட்டி மூலம் கட்டாயப்படுத்திப் பால் ஊட்டினார். அந்தச் சிறுமி திணறி, வாந்தி எடுக்கும்வரை அவர் அவ்வாறு செய்தார்.

அக்குழந்தையின் அழுகையால் கோபமடைந்த அந்த ஆசிரியர், பாதிக்கப்பட்ட குழந்தையைத் தொடர்ந்து துன்புறுத்தி, அவளது முதுகிலும் அடித்தார். அதோடு, அந்த ஆசிரியர் எட்டு மாத ஆண் குழந்தையையும் 10 மாதப் பெண் குழந்தையையும் துன்புறுத்தியதாகவும் அரசுத் தரப்புத் துணை வழக்கறிஞர் டேரன் ஆங் தெரிவித்தார்.

குழந்தைகளின் அடையாளங்களைப் பாதுகாக்க, பெயர் வெளியிடப்படாத அந்த 37 வயது பெண் ஆசிரியருக்குப் புதன்கிழமை (ஜூலை 8) தீர்ப்பு வழங்கப்பட்டது. ஒரு வயதுச் சிறுமியைத் துன்புறுத்திய குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார். மற்ற குழந்தைகள் சம்பந்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன. துன்புறுத்தல் சம்பவம் நடந்த மூன்று நாள்களுக்குப் பிறகு, அந்தப் பாலர்பள்ளியில் குழந்தைத் துன்புறுத்தல் சம்பவங்கள் நடந்துள்ளதாகப் பெயர் குறிப்பிட விரும்பாத நபர் ஒருவர் புகார் அளித்திருந்தார்.

அந்த நபருக்கு அச்சம்பவங்களைப் பற்றி எவ்வாறு தெரியவந்தது அல்லது அவர் யாரிடம் அதுகுறித்து புகார் அளித்தார் என்ற விவரங்களை அரசுத் துணை வழக்கறிஞர் வெளிப்படுத்தவில்லை.

குறிப்புச் சொற்கள்