பயணிகளுக்குத் தொல்லைத் தரும் நடவடிக்கையில் ஈடுபட்டதால் 35 வயது பூயான் முகமது ரோபியஸ் சனிக்குச் சாங்கி விமானம் நிலையத்திற்குள் நுழைய இருமுறைத் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அந்தத் தடை உத்தரவை மீறி, சாங்கி விமான நிலையத்திற்கு வந்த பூயான், அங்கு பங்ளாதேஷியர் ஒருவரிடம் தங்கச் சங்கிலிகள் அடங்கிய பையைக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது, பூயானைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
குற்றம் புரிய வேண்டும் என்ற நோக்கத்தோடு அனுமதியின்றி ஓர் இடத்திற்குள் நுழைந்த குற்றச்சாட்டை பூயான் நீதிமன்றத்தில் ஒப்புகொண்டார்.
அவருக்கு ஆறு நாள்கள் சிறைத்தண்டனை அக்டோபர் 28ஆம் தேதி விதிக்கப்பட்டது.
இவ்வாண்டு செப்டம்பர் 11ஆம் தேதி வரை சாங்கி விமான நிலையத்திற்குள் நுழைய பூயானுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி தடை விதிக்கப்பட்டது.
அந்த உத்தரவை மீறி அவர் கடந்த ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி மீண்டும் அவ்விடத்திற்குள் நுழைந்தார். அவரை எச்சரித்த அதிகாரிகள் இவ்வாண்டும் 12ஆம் தேதி வரை விமான நிலையத்திற்குள் நுழையக் கூடாது எனத் தடை உத்தரவு பிறப்பித்தனர்.
அதையும் மீறி கடந்த ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி விமான நிலையத்திற்குள் நுழைந்து பங்களாதேஷுக்குச் செல்லும் அறிமுகம் இல்லாத பயணிகளிடம் தங்கச் சங்கிலிகள் போன்ற பொருள்களைக் கைமாற்றம் செய்ய அவர் முயன்றதாகக் கூறப்படுகிறது.