தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வங்கிக் கணக்கில் தவறுதலாகப் போடப்பட்ட $25,000 பணத்தைத் திருப்பிச் செலுத்தாத இந்தியருக்குச் சிறை

2 mins read
கடனை அடைக்கவும் ஊருக்கு அனுப்பவும் அப்பணத்தைப் பயன்படுத்திக்கொண்டார்
58011e9e-8ecf-4d5b-b6be-7f3b6dd4b588
மாதிரிப்படம்: - பிக்சாபே

தன் வங்கிக் கணக்கில் போடப்பட்ட $25,000 பணம் தன்னுடையதில்லை என்பதை அறிந்திருந்தும், அதனைத் திருப்பிச் செலுத்தாத ஆடவருக்குத் திங்கட்கிழமையன்று (அக்டோபர் 14) ஒன்பது வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அப்பணத்தைக் கொண்டு தன் கடன்களை அடைத்ததாகவும் சிறிது பணத்தை இந்தியாவிலுள்ள தன் குடும்பத்திற்கு அனுப்பிவைத்ததாகவும் அந்த ஆடவர் கூறினார்.

பெரியசாமி மதியழகன், 47, என்ற அவர், பணத்தைக் கையாடல் செய்ததை ஒப்புக்கொண்டார்.

2021ஆம் ஆண்டிலிருந்து 2022ஆம் ஆண்டுவரை இங்கு குழாய்ப்பணி மற்றும் பொறியியல் தொழில் நிறுவனமொன்றில் அவர் வேலைசெய்தார்.

அந்த நிறுவனத்தைச் சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர், கடந்த 2023 ஏப்ரல் 6ஆம் தேதி நிறுவனத்தின் வங்கிக் கணக்கு என நினைத்து, மதியழகனின் கணக்கிற்கு அந்த $25,000 பணத்தை தவறுதலாக அனுப்பிவிட்டார்.

அந்தக் கணக்கு நிறுவனத்தினுடையது அன்று எனவும் நிறுவனக் கணக்கிற்குப் பணம் வந்துசேரவில்லை எனவும் அதே நாளில் அந்நிறுவன இயக்குநர் ஒருவர், அப்பெண் நிர்வாகியிடம் தெரிவித்தார்.

இதனையடுத்து, அவர் மதியழகனின் கணக்கிற்கு பணத்தைத் தவறுதலாக அனுப்பிவைத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, பணத்தைத் திருப்பிச் செலுத்தச் சொல்லி மதியழகனுக்கு சம்பந்தப்பட்ட வங்கி ஒரு கடிதம் அனுப்பியது. ஆனால், அக்கடிதம் அவர் பணியாற்றிய நிறுவனத்தின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, பணத்தை மீட்க முடியவில்லை எனக் கூறி, 2023 மே 9ஆம் தேதி அப்பெண்ணுக்கு வங்கி ஒரு கடிதத்தை அனுப்பியது.

அதன்பிறகு மே 23ஆம் தேதி அப்பெண் காவல்துறையிடம் புகார் அளித்தார்.

இதனிடையே, தன் கணக்கிற்கு இவ்வளவு பெரிய தொகை வந்துசேரும் என எதிர்பார்த்திராத மதியழகன், அதனை வேறு ஒரு கணக்கிற்கு மாற்றிவிட்டார்.

இதனிடையே, மதியழகனின் பெயரைக் குறிப்பிட்டு, நிறுவனத்திற்கு வங்கி கடிதம் அனுப்பியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அதன் நிறுவனர் மதியழகனை அழைத்து, பணத்தைத் திருப்பிச் செலுத்தும்படி அறிவுறுத்தினார்.

அதற்கு, தன் கடன்களை அடைக்க அப்பணத்தைப் பயன்படுத்திக்கொண்டதாக மதியழகன் கூறிவிட்டார்.

பின்னர், காவல்துறை விசாரணையின்போது, அப்பணத்தில் ஒரு பகுதியை இந்தியாவிலுள்ள தன் குடும்பத்திற்கு அனுப்பிவைத்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

மாதம் 1,500 வெள்ளி என்ற கணக்கில், குறிப்பிட்ட காலத்தில் அப்பணத்தைத் திருப்பித் தந்துவிடுவதாகவும் அவர் கூறினார். ஆனால், சொன்னபடி அவர் பணம் எதையும் திருப்பித் தரவில்லை.

முன்னதாக, சம்பந்தப்பட்ட பெண் நிர்வாகி நிறுவனத்திலேயே கடன் பெற்று, அந்த $25,000 தொகையைத் திருப்பிச் செலுத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்