வங்கிக் கணக்குகளை விற்ற கும்பலில் முக்கிய நபராக விளங்கிய ஆடவர் ஒருவருக்கு மூன்றரை ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளியான கோ சூன் லீக்கு, 2023ஆம் ஆண்டு ஜூலையிலிருந்து அக்டோபர் மாதத்துக்கு இடைப்பட்ட காலத்தில் 34 வங்கி அட்டைகளைப் பெற்று, பயன்படுத்தி, பிறரிடம் கொடுத்ததற்காக சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வங்கி அட்டைகள் கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றப் பயன்படுத்தப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டது.
வியாழக்கிழமையன்று (ஜனவரி 2) கோவுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், அவருக்கு 3,400 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது.
கணினி அமைப்பைத் தவறாகப் பயன்படுத்தியதாக தன் மீது சுமத்தப்பட்டிருந்த 10 குற்றச்சாட்டுகளை 26 வயது கோ ஒப்புக்கொண்டார். தீர்ப்பளிக்கும்போது மேலும் 26 குற்றச்சாட்டுகள் கருத்தில்கொள்ளப்பட்டன.
28 வயது ஓ ஷி சியாங் என்று அடையாளம் காணப்பட்டுள்ள ஒருவருடன் கோ இணைந்து இச்செயலில் ஈடுபட்டதாக துணை அரசாங்க வழக்கறிஞர் மேத்தியு சூ தெரிவித்தார். அவர்கள் தவறாகப் பயன்படுத்திய வங்கி அட்டைகள், வேலை அனுமதி அட்டையைப் பெற்ற வெளிநாட்டவரின் வங்கிக் கணக்குகளுக்குச் சொந்தமானவை என்றும் திரு சூ குறிப்பிட்டார்.
ஓ ஷி சியாங், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மற்றொரு நபரான 31 வயது லிம் குவோ ஹுய் ஆகியோரது வழக்குகளின் நிலை குறித்த விவரங்கள் நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்படவில்லை.

