தன் முதலாளியின் ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்தி, அவரது வங்கிக் கணக்கிலிருந்து 28,000 வெள்ளியைக் களவாடிய பணிப்பெண்ணுக்கு வியாழக்கிழமை (ஜூலை 18) ஓராண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
முதுமைக்கால மறதிநோயால் பாதிக்கப்பட்டிருந்த 83 வயது முதிய ஆடவரைப் பார்த்துக்கொள்வதற்காகப் பணியமர்த்தப்பட்டார் ஸ்ரீயத்துன், 45, என்ற அந்த இந்தோனீசியப் பெண்.
எப்படியோ அம்முதியவரின் பிஓஎஸ்பி (POSB) வங்கி ஏடிஎம் அட்டையின் கடவு எண்ணை ஸ்ரீயத்துன் தெரிந்துகொண்டார்.
பின்னர் அவரது ஏடிஎம் அட்டையை 19 முறை திருடி, அதனைக் கொண்டு 36 முறை பணம் எடுத்தார் ஸ்ரீயத்துன். ஒவ்வொரு முறை பணம் எடுத்த பிறகும் அந்த அட்டையை உரிய இடத்தில் திரும்ப வைத்துவிடுவதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இப்படி ஒன்பது மாத இடைவெளியில் அவர் $28,000 பணத்தைத் திருடினார். இறுதியில், அம்முதியவரின் வங்கிக் கணக்கில் $47.19 மட்டுமே எஞ்சியிருந்தது.
இந்நிலையில், 2023 நவம்பர் மாதம் ஸ்ரீயத்துனின் குட்டு வெளிப்பட்டது.
சேவை, பராமரிப்புக் கட்டண நிலுவைத்தொகையைச் செலுத்தக் கோரி, நகர மன்றம் கடிதம் அனுப்பியிருந்தது. வழக்கமாக, ஜைரோ மூலம் அக்கட்டணம் செலுத்தப்பட்டுவிடும் என்பதால், அக்கடிதத்தைக் கண்ட அம்முதியவரின் மகனுக்கு ஏதோ தவறு நிகழ்ந்திருக்கலாம் எனத் தோன்றியது.
அதனையடுத்து, தம் தந்தையின் வங்கிக் கணக்கைச் சோதித்தபோது, அதில் பணமில்லாததை அவர் கண்டுபிடித்தார். அதனைத் தொடர்ந்து, அவர் காவல்துறையில் புகாரளித்தார்.
தொடர்புடைய செய்திகள்
ஸ்ரீயத்துன் தான் களவாடிய பணத்தில் 11,000 வெள்ளியை இந்தோனீசியாவிலுள்ள தன் குடும்பத்திற்கு அனுப்பிவிட்டார். எஞ்சிய 17,000 வெள்ளியையும் அவர் செலவழித்துவிட்டார்.
ஒரு பணியாளாக இருந்துகொண்டு, தன் முதலாளியிடமிருந்து திருடுவோருக்கு ஏழாண்டு வரை சிறையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

