உணர்வற்ற நிலையில் துணைக் காவல் அதிகாரி; மோதித் தள்ளிய ஆடவருக்குச் சிறை

1 mins read
963b9dca-13bf-4424-ad9c-65a6e820c81e
ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டிக் கடுமையான காயத்தை விளைவித்தல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் தொடர்பான குற்றச்சாட்டுகளை பிப்ரவரி 27ஆம் தேதி யூங் ஒப்புக்கொண்டதாகக் கூறப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மூன்று வெவ்வேறு இடங்களில் ஏழு மணிநேரத்திற்கு மேல் மது அருந்திவிட்டு வீட்டை நோக்கித் தன் காரில் சென்ற 44 வயது யூங் கொக் கய், துவாஸ் சோதனைச்சாவடி வரை சென்று அங்கிருந்த துணைக் காவல் அதிகாரியை மோதித் தள்ளி அவரை உணர்வற்ற நிலைக்குத் தள்ளியதாகக் கூறப்பட்டது.

தன் ‘லெக்சஸ்’ காரை வேகவரம்புக்கு மேல், மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட்டி வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்த யூங், சோதனைச்சாவடியில் இருந்த 30 வயது அதிகாரியை மோதித் தள்ளியதுடன் அவ்விடத்தில் 37,290 வெள்ளிக்கு மேலான சேதத்தையும் விளைவித்ததாகக் கூறப்பட்டது.

யூங்குக்கு மார்ச் 17ஆம் தேதி மூன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் விடுதலைக்குப் பின்னர் அனைத்து வகை வாகன உரிமங்களையும் வைத்திருப்பதற்குப் பத்தாண்டு தடையும் விதிக்கப்பட்டது.

“குற்றம் சாட்டப்பட்டவர் மது அருந்தியதுடன் வாகனம் ஓட்ட முடிவெடுத்ததில் உண்டான தேவையற்ற, அறிவற்ற, துயரம் அளிக்கும் ஒரு விபத்து இது,” என்று மாவட்ட நீதிபதி கொக் ஷு-என் கூறினார்.

அரசாங்கச் சொத்தைச் சேதப்படுத்தியதுடன் இளையர் ஒருவருக்கு மீளாத் துயரத்தை யூங் அளித்துவிட்டதாகவும் நீதிபதி சுட்டினார்.

விபத்தில் திரு இங் யி ஷுவுக்குக் கடுமையான மூளைக்காயம் ஏற்பட்டதை அடுத்து அவர் படுத்த படுக்கையாக, பேச முடியாத நிலையில் உள்ளார். அத்துடன் மூக்கு வழியாக குழாய் மூலம் உணவு செலுத்தப்படுகிறது.

குறிப்பு: முதலில் வெளியான செய்தியில் மூன்றாண்டுகள், பத்து மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது என்றிருந்தது. தவறுக்கு வருந்துகிறோம்.

குறிப்புச் சொற்கள்