பாதுகாப்பு அதிகாரி செயல்படும் விதத்தைப் பார்க்க ஆடவர் ஒருவர் 10 கேன்கள் அளவு ‘பியர்’ அருந்திவிட்டு ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டிலிருக்கும் பிடோக் ராணுவ முகாமுக்குள் காரைச் செலுத்தியிருக்கிறார்.
தனியார் வாடகைக் கார் ஓட்டுநரான முகம்மது சாதிக் முகமது சதக்கத்துல்லா, 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ஆம் தேதி அதிகாலை ஆறு மணியளவில் பிடோக் ராணுவ முகாமுக்குச் சென்றார். அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரி அவரை முகாமுக்குள் அனுமதிக்கவில்லை.
அதனால் சாதிக் பாதுகாப்புத் தடுப்பின் மீது காரை மோதியபடி நுழைந்தார். அதன் பின்னர் அவர் காரைத் திருப்பி வெளியே செல்லும் வழியில் இருக்கும் பாதுகாப்புத் தடுப்பின் மீது மோதினார்.
அவரை வீட்டில் கைது செய்யப்பட்டபோது சாதிக்கின் 100 மில்லி லிட்டர் அளவு மூச்சுக்காற்றில் 36 மைக்ரோகிராம் அளவு மதுபானம் இருந்தது தெரிய வந்தது. விதிமுறைகளின்படி, 35 மைக்ரோகிராமுக்கு மேல் மதுபானம் கலந்திருக்கக்கூடாது.
38 வயது சிங்கப்பூரரான சாதிக்குக்கு புதன்கிழமையன்று (டிசம்பர் 18) 20 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பாதுகாக்கப்பட்ட இடத்துக்குள் அனுமதியின்றி நுழைந்தது, காவல்துறை அதிகாரியைத் தாக்கியது ஆகியவற்றின் தொடர்பில் தன் மீது சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார்.
பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த காலத்தில் இவ்வாண்டு செப்டம்பர் மாதம் அவர் காவல்துறை அதிகாரிகள் இருவரைத் தாக்கியிருக்கிறார்.
சென்ற ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி இரவு சுமார் 8.30 மணிக்குப் பயணி ஒருவரை இறக்கிவிட்ட பிறகு சாதிக் இரண்டு கேன்கள் ‘பியர்’ அருந்தினார் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். வீடு திரும்புவதற்கு முன்பு அவர் மேலும் நான்கு கேன்கள் ‘பியர்’ அருந்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மறுநாள் அதிகாலை இரண்டிலிருந்து மூன்று மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். அது காவல்துறைக்குத் தெரிய வந்தது. அதுகுறித்த மேல்விவரங்கள் நீதிமன்ற ஆவணங்களில் இடம்பெறவில்லை.
தொடர்புடைய செய்திகள்
அதற்குப் பிறகு மேலும் நான்கு கேன்கள் ‘பியர்’ அருந்திய சாதிக் நிதானத்தை இழந்தார். அப்படியிருந்தும் அவர் பிடோக் ராணுவ முகாமுக்குக் காரை ஓட்டிச் செல்ல முடிவு செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.