தனது காதலியின் 11 வயது சிறப்புத் தேவையுடைய மகளை அவரது தாயார் முன்னிலையில் துன்புறுத்திய ஆடவருக்கு நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி, ஓராண்டுச் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அந்த ஆடவர் சிறுமியைத் தாக்கியபோது அதைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சிறுமியின் தாய்க்கு 10 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சிறுவர் மற்றும் இளையர் சட்டத்தின்கீழ், சிறப்புத் தேவையுடைய சிறுமியை மோசமாக நடத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை அந்த ஆடவர் ஒப்புக்கொண்டார். அதேநேரத்தில் அந்தச் சிறுமியின் தாயார், தெரிந்தே தாக்குதலை அனுமதித்த குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தைக் கட்டிக்காக்கும் பொருட்டு, 36 வயதாகும் அந்த தம்பதியரின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.
அந்தத் தம்பதியருக்குத் தீர்ப்பளிக்கப்பட்டபோது மாவட்ட நீதிபதி ஷைஃபுதீன் சருவான், பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமி, முன்னதாக அந்த ஆடவரை ‘அப்பா’ என அழைத்து மிகப் பாசமாகப் பழகி வந்தார். அப்படிப்பட்ட அந்தச் சிறுமி இவ்வளவு மோசமான தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டு மனரீதியில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது சிறப்புத் தேவைகள் காரணமாக எளிதில் பாதிக்கப்படும் மனநிலை அவருக்கு உள்ளது என்று நீதிபதி கூறினார்.