பணம் தேவைப்பட்டதால் கிடங்கு ஒன்றில் வேலை செய்த செயல்பாட்டு ஊழியர் ஒருவர் கிட்டத்தட்ட 212,000 வெள்ளி மதிப்பிலான பொருள்களைத் திருடியிருக்கிறார்.
அவர் திருடிய பொருள்களில் 457 கோபுரோ (GoPro) கேமராக்களும் அடங்கும். தான் வேலை செய்த இடத்திலிருந்து அப்பொருள்களைத் திருடி அவர் ஜோகூரில் வேறொருவரிடம் விற்றிருக்கிறார்.
அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு அவர் மலேசியாவில் இருக்கும் தனது வீட்டுக்காக அறைகலன்களையும் ஒரு மோட்டர் சைக்கிளையும் வாங்கியிருக்கிறார்.
குற்றவாளியான ஃபைஸத் முகம்மது பாஸ்ஸுல் எனும் 27 வயது மலேசிய ஆடவருக்கு செவ்வாய்க்கிழமை (மார்ச் 11) ஓராண்டு ஒன்பது மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. திருடியதாகத் தன் மீது சுமத்தப்பட்ட ஒரு குற்றச்சாட்டை அந்த ஆடவர் ஒப்புக்கொண்டார்.
அவர் திருடிய பொருள்கள் எதையும் திருப்பித் தரவில்லை. 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கும் சென்ற ஆண்டு மே மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் ஃபைஸத், உபி அவென்யூ நான்கில் இருக்கும் தான் வேலை செய்யும் கிடங்கிலிருந்து வாரந்தோறும் இரண்டிலிருந்து மூன்று முறை திருடினார் என்று இணை அரசாங்க வழக்கறிஞர் ஜோர்டி கே தெரிவித்தார்.
வேலை முடிந்த பிறகு தான் திருடிய பொருள்களை அவர் கறுப்பு நிறக் குப்பைப் பையில் ஒளித்து வைத்ததாகவும் இணை அரசாங்க வழக்கறிஞர் குறிப்பிட்டார்.
கிடங்கில் கணக்கெடுப்பு நடந்தபோது பல பொருள்கள் காணாமற்போனது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து ஃபைஸத்தின் குற்றங்கள் வெளிச்சத்துக்கு வந்தன.